×

‘நாளைக்குள் கூட்டணிக்கு வாருங்கள்’ விஜயகாந்த்திடம் ஓ.பி.எஸ் கெஞ்சல் : பரபரப்பு பின்னணி தகவல்

சென்னை : பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால், அதற்குள் கூட்டணிக்கு வாருங்கள் என்று வீட்டுக்கே சென்று விஜயகாந்திடம் கெஞ்சும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான பரபரப்பு பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணியில் தேமுதிக வரும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிகவிடம் பல கட்ட பேச்சை நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிமுக நடத்தியது. ஆனால் கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்கவில்லை. இதனால், கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது. மேலும் பாஜக தரப்பிலும் விஜயகாந்திடம் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டது. ஆனால், அதிக தொகுதிகள் வேண்டும் என்பதில் தேமுதிக பிடிவாதமாக இருந்தது. இதற்கிடையே தேமுதிகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கே இல்லை. அப்படியிருக்கும் போது எங்களை விட அதிக சீட் கேட்பதில் என்ன  நியாயம் என்றும் பாமகவினர் கேள்வி எழுப்பினர். மேலும் பாமக தரப்பிலும் தேமுதிகவுக்கு எங்களை விட அதிக தொகுதிகள் கொடுக்க கூடாது என்றும் போர்க்கொடி உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி பாஜக மேலிடம் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்தது. இதனால் அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்பாக நேற்று முன்தினம் கையெழுத்தாகலாம் என்ற அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்த அதிமுக தரப்பில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிக தரப்பில் மேலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும், ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும். 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு போட்டியிட இடங்கள் வழங்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் மாநிலங்களவை சீட் வழங்கப்படாது.  இடைத்தேர்தலில் சீட் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. மற்ற நிபந்தனைகளுக்கு அதிமுக சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. தங்களது நிபந்தனைகளை ஏற்காததால் விஜயகாந்த் 5ம் தேதி (இன்று) தேமுதிகவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இது அதிமுகவுக்கு மேலும் எரிச்சலையும் பதற்றத்தையும் உருவாக்கியது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக வருமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக மாநிலங்களவை எம்பி சீட் தராவிட்டால், தேர்தலுக்குப் பிறகு நாங்கள் தருகிறோம். பாஜ ஆட்சிக்கு வந்தால் 2 அமைச்சர் பதவி தருகிறோம் என பாஜ வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் பண விவகாரம் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை திடீரென சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றார். அவர்களை வாசல் வரை வந்து துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கு விஜயகாந்தை சந்தித்து சால்வை, பூங்கொத்து கொடுத்து இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜயகாந்த் உடல் நலம் குறித்தும், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ஓ.பி.எஸ். விஜயகாந்திடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேமுதிக தரப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் இருந்தனர். மாலை 5.40 மணிக்கு தொடங்கிய சந்திப்பு 6.40 மணி வரை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காகவும் வந்தோம். அவர் பூரண குணமடைந்து மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எங்களிடம் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும்  பேசினார். நாங்களும் நீங்கள் எப்போதும் போல் இன்றும், நாளையும் உடல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும் என்கிற எங்களுடைய விருப்பத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தோம். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றோ அல்லது நாளையோ ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டு  முதலில் உங்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு) தெரிவிப்போம். 6ம் தேதிக்குள் கூட்டணி பற்றிய அனைத்து கட்சிகளுடைய முடிவுகளும் உரிய முறையில், நல்ல முறையில் அறிவிக்கப்படும். 6ம் தேதி பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் பங்கேற்று இன்றைக்கு நாட்டிலே இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகள் பற்றியும், நாடு இன்று இருக்கின்ற சூழ்நிலையில் இந்திய திருநாட்டிற்கு யார் தலைமை ஏற்றால் நாட்டிற்கு நல்லது என்பது குறித்தும் தங்களுடைய எழுச்சி உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

பொறுத்திருந்து பாருங்கள் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்றோ, நாளையோ தெரியும். 6ம் தேததி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் என்று ஓபிஎஸ் கூறினார். தேமுதிகவின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில்  இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக பணிந்தது ஏன்?

அதிமுக கூட்டணிக்கு வருமாறு பாஜக மேலிடம் தொடர்ந்து தேமுதிவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக பாஜக மேலிடம் தரப்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரடியாக விஜயகாந்த்தை சந்தித்து பேசினார். மேலும் தமிழக பாஜக தலைவர்களும் சந்தித்து பேசினர். அதிமுக ஒதுக்கும் சீட்டை வாங்கி கொள்ளுங்கள். மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமையும். அதில் கூட்டணி கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். வெற்றி பெற்று வந்தால்  தேமுதிகவில் 2 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படும். மாறாக தோல்வியை சந்தித்தாலும் பரவாயில்லை. மாநிலங்களவையில் ஒரு இடம் வழங்கி அதில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பாஜக மேலிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்ட பிறகே, அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர சம்மதித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணம் எவ்வளவு வழங்கப்படும் என்பதை விஜயகாந்த்தின் கையில் 3 விரலைப் பிடித்து ஓபிஎஸ் எண்ணிக்கையை தெரியப்படுத்தினாராம். மாடுகள் வாங்க துண்டுபோட்டு பேரம் பேசுவதுபோல இருவரும் கையைப் பிடித்து பேசியுள்ளனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,Ojas Kumble ,Vijayakanth , coalition within tomorrow,Vijayakanth,ops
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...