×

திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேக்கம்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

ஆவடி: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் பல ஆண்டாக திறந்தவெளியிலும், மூடிய நிலையிலும், தற்காலிக கால்வாயாக தான் உள்ளது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டாக கம்பெனிகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீர் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால், கால்வாய் நாளடைவில் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த கழிவுநீர் அரபாத்  எரிக்குள் சென்று கலக்கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பது கிடையாது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சி.டி.எச் சாலை, கல்லறை தோட்டம், பெட்ரோல் பங்க் அருகில் ஒரு மாதமாக கழிவுநீர்  தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பல ஆண்டாகியும் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்  தற்காலிக கால்வாய் வழியாக  செல்கிறது.

இந்த கால்வாய் அமைந்து உள்ள சி.டி.எச் சாலை, கல்லறை தோட்ட பகுதியில் அடைப்பு ஏற்பட்டு  கடந்த ஒரு மாதமாக  தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும்,  பெட்ரோல்  பங்க் அருகில் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால், பாதசாரிகள் சாலையில் மூக்கை பிடித்து கொண்டு தான் சென்று வருகின்றனர்.இதனால் தூர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர். கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால்  பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில்  உள்ள கல்லறை தோட்டம், பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கால்வாயை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rain water canal ,road ,Thirumullaivil , Thirumullaivilai road,rain water ,channel, disorder
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி