×

பாகிஸ்தான் எப்-16 விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியது எப்படி?

புதுடெல்லி: இந்திய விமானப்படை பைலட் விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் நாட்டின் எப்-16 ரக போர் விமானத்தை எப்படி வீழ்த்தினார் என்பது குறித்த புள்ளி விவரத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானங்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டு வீசின. மறுநாள் 27ம் தேதி, இந்திய பகுதியில்  பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வந்தன. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை விரட்டின. இந்த சண்டையில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானமும், இந்திய விமானி அபிநந்தன்  சென்ற மிக்-21 பைசன் ரக விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.  அன்று காலை நடந்த சம்பவங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்:

9.52 மணி:  பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்களில் இருந்து, பத்து எப்-16 விமானங்கள் முதலில் புறப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் நேத்ரா ரேடார் கண்டுபிடித்தது. 3 குழுக்களாக வந்த எப்-16 போர்  விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை நெருங்கியதும் தாக்குதல் நடத்துவதற்கு ஒன்றாக இணைந்தன.
9.54: பாகிஸ்தான் எப்-16 விமானங்களை இடைமறிப்பதற்காக, இந்திய விமானப்படை இரண்டு மிக்-21 ரக போர் விமானங்கள், 4 சுகாய் ரக போர் விமானங்களை முதலில் அனுப்பியது.
9.58: சர்வதேச போர் விதிமுறைப்படி, பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்தியா முதல் எச்சரிக்கை விடுத்தது. ‘நீங்கள் எங்கள் வான் பகுதியை ஆக்கிரமித்துள்ளீர்கள். வெளியேறுங்கள்’ என கூறப்பட்டது.
9.59: பாகிஸ்தான் விமானப்படைக்கு 2வது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பதில் இல்லை.
10.00: எப்-16 போர் விமானங்கள் இந்திய எல்லையில் அத்துமீறி பறந்தன.
10.01: எப்-16 போர் விமானங்களை சுட்டு வீழ்த்த தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தியாவின் மிக்-21 மற்றும் சுகாய் விமானங்கள், பாகிஸ்தானின் ஒன்பது எப்-16 ரக விமானங்களை  குறுக்கிட்டு அவற்றை பாதை மாறிச் செல்ல வைத்தன. ஒரு கி.மீ வான் எல்லைக்குள், ஒன்பது எப்-16 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு திரும்பின.
10.02: ஒரே ஒரு எப்-16 போர் விமானம் மட்டும் இந்தியா எல்லைக்குள் 3 கி.மீ தூரம் ஊடுருவி, ராணுவ தலைமையகத்தில் இருந்த பெட்ரோலிய எரிபொருள் கிடங்கு மீது குண்டு வீச முயன்றது.
10.03: அபிநந்தன் இயக்கிய  மிக்-21 விமானமும், மற்றொரு சுகாய் விமானமும், ஊடுருவிய எப்-16 ரக விமானத்தை வழிமறித்தன. முதலில் மிக்-21 ரக விமானமும், நடுவில் எப்-16 ரக விமானமும், அதை விரட்டிய படி சுகாய்  விமானமும் சென்று கொண்டிருந்தன. சுகாய் விமானத்தில் இருந்து ஏவுகணை பாய்ந்ததும், எப்-16 ரக போர் விமானம் பாதை மாறியது.
10.04: உடனே சுகாய் விமானம், இந்திய ராணுவ எண்ணெய் கிடங்கை சுற்றியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது, அபிநந்தன், அந்த எப்-16 ரக விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை விரட்டினார்.
10.08: எப்-16 விமானத்தை நெருங்கியதும், தனது மிக்-21 விமானத்தில் பொருத்தப்பட்ட ஆர்-73 ரக ஏவுகணையை அபிநந்தன் ஏவினார். அது எப்-16 ரக போர் விமானத்தை துல்லியமாக தாக்கி கீழே விழவைத்தது. அதற்கு முன்  ‘ஆர்-73 செலக்டட்’ என விமானத்தில் இருந்து அபிநந்தன் தகவல் அனுப்பினார். அதுதான் அவரது கடைசி ரேடியோ தகவல். பாகிஸ்தான் பகுதிக்குள் இந்த தாக்குதல் நடந்ததால், அபிநந்தன் விமானத்தை நோக்கி,  தரையிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க விமானத்தை பக்கவாட்டில் சுழற்றி பறந்து செல்லும் (‘ஹை-ஜி பேரல் ரோல்’) அபாயகரமான முறையை அபிநந்தன் பயன்படுத்தினார்.  அதன்பின் விமானத்தை செங்குத்தாக வானத்தை நோக்கி செலுத்தி இந்தியா திரும்ப முயன்றார். அப்போதுதான் ஒரு ஏவுகணை அவரது விமானத்தை தாக்கி கீழே விழ வைத்தது. அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தரையிறங்கினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , Pakistan ,Flight F-16, Abhinanthan, shoot down?
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...