×

அதிமுகவுடன் கூட்டணி இழுபறி நீடித்து வரும் நிலையில் விஜயகாந்த்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு; சென்னையில் நாளை தேமுதிக அவசர ஆலோசனை

சென்னை: அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி இழுபறி நீடித்து வரும் நிலையில் விஜயகாந்த்தை சமக தலைவர் சரத்குமார் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த நிலையில் சென்னையில் வருகிற 5ம் தேதி(நாளை) தேமுதிக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக-அதிமுக இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் அதிகம் தொகுதி கேட்பதால் அதிமுக கூட்டணியில் சேர்க்க முடியாத நிலை தான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியும் அதிமுக தரப்பிலும் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக-தேமுதிக உடன்பாடு கையெழுத்திடுவற்கான ஏற்பாடுகளை அதிமுக நேற்று முன்தினம் செய்திருந்தது. ஆனால் கடைசியில் தேமுதிக வரவில்லை.

இதனால், அதிமுக, தேமுதிக கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் தேமுதிக தரப்பில் 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, “5 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட வேண்டும். 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். அதிலும் கடந்த முறை தேமுதிக போட்டியிட்ட தொகுதி வழங்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் ஒதுக்க வேண்டும்” என்று தேமுதிக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனை அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொகுதியையும், பணம் சம்பந்தமான கோரிக்கைக்கு அதிமுக சம்மதம் தெரிவித்தது. இடைத்தேர்தலில் போட்டியிட சீட் தர முடியாது என்று அதிமுக தெரிவித்து விட்டது. இதனால், தேமுதிக-அதிமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இதனால், அதிமுக தொண்டர்களும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமக தலைவர் சரத்குமார் நேற்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது சரத்குமார் விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இரண்டு பேரும் மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த்-சரத்குமார் இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து 6ம் தேதி அறிவிக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய சமத்துவ கட்சியின் நிலைப்பாட்டை 5ம் தேதி அறிவிக்கிறோம். தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது அன்று தெரியும். நாங்கள் இருவரும் அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். அவருடைய கருத்தை கேட்டு கொண்டேன். என்னுடைய கருத்தையும் அவரிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால் விஜயகாந்த் தான் முடிவு எடுக்க வேண்டும். கூட்டணி என்பது அவருடைய கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ? அதன் அடிப்படையில் எடுக்க வேண்டியது. அவர்களுடைய முடிவில் தலையிட நான் வரவில்லை.

ஆனால் என்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறேன். தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மக்களவை தேர்தலுக்காக விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் சரத்குமார் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகிற 5ம் தேதி தேமுதிக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருடன் கூட்டணி
தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தேமுதிக அவசர ஆலோசனை கூட்டம் வருகிற 5ம் தேதி(நாளை) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடக்கிறது. தேமுதிக நிறுவன தலைவரும், பொது செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்குமா என்பது தெரியவரும். இதனால் தற்போது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு நிலவி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Sarathkumar ,coalition ,Vijayakanthan ,Emergency consultation ,Chennai ,AIADMK , Alliance with the AIADMK pulled, Vijayakanth, Sarath Kumar, sudden meeting
× RELATED குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!!