×

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன விவகாரம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றியதையடுத்து நேற்று விசாரணை தொடங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த முகிலன் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று  கடந்த 14ம் தேதி  சென்னையில் ஆவண படம் ஒன்று வெளியிட்டார்.  துப்பாக்கி சூடு குறித்து ஆவணப்படம் வெளியிட்ட மறுநாளே அதாவது கடந்த 15ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென மாயமானார். இதையடுத்து கடந்த 17ம்தேதி எழும்பூர் ரயில்  நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி புகார் ஒன்று அளித்தார். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன் செல்போன் மற்றும்  சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் சிக்னல் செங்கல்பட்டு வரை  இருந்துள்ளது. அதன் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாயமாகி 10 நாட்கள் ஆகியும் முகிலனை ரயில்வே போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அரசுக்கு  கோரிக்கை விடுத்தன.
அதன்படி முகிலன் மாயமான வழக்கை, தமிழக டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணியிடம் சிபிசிஐடி  போலீசார் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை விசாரணை நடத்தினர்.

காவல் ஆய்வாளரை விசாரிக்க முடிவு
வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் செயலாளர் முகம்மது கவுஸ் என்பவர் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் முகிலனை கண்டுபிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கைைய  வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தி அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாகராஜன் என்பவர் சமாதி என்று வார்த்தையை பதிவிட்டார். ேமலும் சமாதி என்று பதிவிட்டவர்  ராஜபாளையத்தை சேர்ந்த நாகராஜன் நாராயணன் என்பவர் காவல் உடையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்  செந்தில்குமாரிடம் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயலாளர் முகமது கவுஸ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளரை திங்கள் கிழமை சம்மன் அனுப்பி விசாரணை செய்ய முடிவு செய்ததாக  கூறப்படுகிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBCID ,investigation ,Mugilan ,disappearance , Environmental, Mugilan ,e CBCID ,began
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...