×

அருப்புக்கோட்டையில் கழிவுநீர் குளமானது கோயில் குளம்

* நீர்நிலையை காக்க தன்னார்வலர்கள் முன்வருவார்களா?

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயில் குளம், கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் சூரிய புஷ்கரணி நோய் தீர்த்த குளம்; தற்போது நோய் பரப்பும் குளமாக மாறி வருகிறது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  இக்கோயிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 88 சென்டில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் சூரிய புஸ்கரணி என அழைக்கப்பட்டது. இங்கு குளித்தால் தீராத நோய் தீரும் என்பது ஐதீகம்.

இதில் தண்ணீர் தேங்கினால், நகரில் உள்ள நான்குரத வீதிகள் மற்றும் திருச்சுழி ரோடு உள்ளிட்ட பல பகுதி குடியிருப்புகளில், போர்வெல்களில் நிலத்தடி நீர் உயரும். இந்த குளத்திற்கு பிறமடை ஓடை வழியாக தண்ணீர் வந்து சேரும். மழை காலங்களில் மழைநீர் தெப்பத்திற்கு வருவதற்கு நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால், மழைநீர் தெப்பத்திற்கு வருவதில்லை.

இந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாமல், தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட கிணறுகள் முட்புதர் சூழ்ந்து காட்சிப் பொருளாக உள்ளது. தெப்பத்தின் ஒருபுறம் திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இரவு நேரங்களில் சமூக  விரோதிகளின் திறந்தவெளி பாராக மாறுகிறது. இதனை தடுக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.  

தனியார் அமைப்புகள் முன்வருமா?

தெப்பத்தை தூர்வாரி சுற்றி முள்வேலி அமைக்கவும், மழைநீர் வரும் வகையில் பிறமடை ஓடையை சீரமைக்கவும், தெப்பத்தில் தண்ணீர் தேக்கி, தெப்பத்திருவிழா நடத்தவும்  சமூக ஆர்வலர்களும், தனியார் பொதுநல அமைப்புகளும் முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pond ,Aruppu Kond , Arupukkottai, Meenakshi Sokkanathar Temple,water pond,
× RELATED திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!!