×

ஆசிய பைக் ரேஸ் தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னை: ஹோண்டா நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற தமிழக வீரர்கள்,   இந்தியா சார்பில் மலேசியாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான பைக் ரேஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருந்து உலகத் தரத்திலான மோட்டார் பந்தய வீரர்களை உருவாக்கும் பணியில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக ஷோவா நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இளம் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம். 21 நகரங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இருந்து 13வயது முதல் பல்வேறு வயது பிரிவினர் 132 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 12 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறோம். மே, ஜூன் மாதங்களில் தாய்லாந்தில் நடைபெற உள்ள டேலன்ட் கப் சீசனுக்கான போட்டியாளர்கள் குழுவில் சென்னையை சேர்ந்த  மொகமது மிகெய்ல் (14),  கர்நாடகாவை சேர்ந்த ஹ்ருதிக் ஹபிப் (18) பங்கேற்கின்றனர்.

மலேசியாவில் மார்ச் 8, 10 தேதிகளில்   ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப்-2019 முதல் சுற்று நடைபெற உள்ளது. இதில்  இந்தியா சார்பில்  சென்னையை சேர்ந்த ராஜீவ் சேது (21), ரூகி செந்தில்குமார்(17) பங்கேற்கின்றனர். இவர்கள் இருவரும்  இடெமிட்சு ஹோண்டா  நிறுவனம் மூலம் பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போட்டியில் வெற்றிப் புள்ளிகளை குவிப்பவர்கள் அடுத்து ஆஸ்திரேலியா, தாய்லாந்து , ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்தில் நடைபெறும் அடுத்த சுற்றுகளில் பங்கேற்பார்கள். சர்வதேச  போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதிக்க ஹோண்டாவும் அதன் தலைமை பயிற்சியாளர் பிரபாகரன் தலைமையிலான குழுவும்  இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரபு நாகராஜ் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian ,bike races ,Tamilnadu , Asian Bike Race, Tamilnadu
× RELATED ஆசிய இளையோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவன் கலெக்டரிடம் வாழ்த்து