×

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 38வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் தெற்குவீதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நேற்று தொடங்கியது. மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் பெங்களூரு ஸ்கந்த நாட்டியாலயா மாணவிகளின் பரதம், அமெரிக்க சித்தேந்திர குச்சுப்புடி கலை மைய மாணவர்களின் குச்சுப்புடி நடன நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.மலேசியா நிருத்ய கலாஞ்சலி நாட்டிய மைய மாணவிகளின் பரதம், பெங்களூரு நூபூர் கலை மைய ஹரி சேத்னா குழுவினரின் கதக் நடன நிகழ்ச்சி, நிருத்திய பிரகாஷ வர்ஷினியின் நாட்டிய நாடகம் ஆகியவை நடந்தது. இதனை தொடர்ந்து இந்தோனேஷியா சிந்து நாட்டியப்பள்ளி, மலேசியா நர்த்தனா நாட்டியப்பள்ளி, தானே தக்ஷஷீலா நிருத்ய கலா மந்திர் மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது.

 முன்னதாக நாட்டியாஞ்சலி விழாவை நெய்வேலி என்எல்சி சேர்மன் ராகேஷ்குமார் தொடங்கி வைத்து பேசுகையில், நடராஜர் ஆனந்த நடனம் புரியும் சிதம்பரத்தில் ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரியமிக்க பரதம், கதக், ஓடிசி, குச்சுப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன கலைஞர்கள் பங்கேற்று இங்கு இறைவனுக்கு  நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். தென்னகத்தில் பல நகரங்களில் நாட்டியாஞ்சலி விழா நடந்து வந்தாலும் நாட்டியாஞ்சலி தொடங்கியது சிதம்பரத்தில்தான் என்றார்.

விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத் தலைவர் டாக்டர் முத்துக்குமரன், முன்னாள் தலைவர் வழக்கறிஞர் நடராஜன், துணைத்தலைவர் ராமநாதன், செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம், பொருளாளர் சக்தி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று நாட்டியாஞ்சலியை கண்டு ரசித்தனர். இரண்டாம் நாளான இன்று பெங்களூரு சமஸ்கிருதி நாட்டியப்பள்ளி மாணவர்கள், சென்னை மதுமிதா ராம், சுவிட்சர்லாந்து ஓம்காரா நாட்டியப்பள்ளி மாணவ், மாணவிகள் பரதநாட்டியமும், பெங்களூரு நிருத்யத்வனியின் ஒடிசி நடனமும் இடம் பெறுகிறது. நாட்டியாஞ்சலி விழா 4ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Chidambaram , Chidambaram, Natyanjali, Mangala Music
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...