×

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடிக்கு தயாராக உள்ளோம்: முப்படை அதிகாரிகள் பேட்டி

புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான் அத்துமீறினால், பதிலடிக்கு தயாராக இருக்கிறோம்’’ என முப்படை உயர் அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 முகாம்கள் மீது இந்தியா விமானப்படை விமானங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் குண்டு வீசின. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் நேற்று முன்தினம் காஷ்மீர் பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானங்கள் இடைமறித்து விரட்டின. இந்த சண்டையில் பாகிஸ்தான் எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவரது விமானமும் அந்நாட்டு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாராசூட் மூலம் தரையிறங்கிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பாதுகாப்பில் உள்ளார். அவரை இன்று விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முப்படை உயர் அதிகாரிகள் பேட்டியளித்தனர். அப்போது விமானப்படை உயர் அதிகாரி ஏர்வைஸ் மார்ஷல் கபூர் கூறியதாவது:நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி வருவதை விமானப்படை ரேடார்கள் காட்டியது. அவற்றை வழிமறித்து தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட்டன. இதனால் பாகிஸ்தான் விமானங்களின் தாக்குதல் முயற்சி தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டது. நமது ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் விமானங்களால் தாக்குதல் நடத்த முடியவில்லை. இந்த நடவடிக்கையில் விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானத்தை விமானப்படை இழந்தது. அதில் இருந்து வெளியே இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்தது. ஆனால் இந்திய விமானிகள் பலரை பிடித்ததாக பாகிஸ்தான் பொய் தகவல்களை தெரிவித்தது. பின்னர் ஒரே ஒரு விமானி மட்டும் தங்கள் வசம் உள்ளார் என கூறியது. ஆளில்லா இடங்களில் குண்டு வீசியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தவே அவர்கள் விரும்பினர்.

பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தில் இருந்த வீசப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் இந்திய பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்திய பைலட் விங் கமாண்டர் அபிநந்தன் திருப்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்களை விமானப்படை விமானங்கள் துல்லியமாக தாக்கின. இதில் எவ்வளவு பேர் பலியாகினர் என்பதை இப்போது கூறமுடியாது. நாங்கள் அழிக்க நினைத்த இலக்குகளை அழித்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை காட்டுவதற்கான முடிவை அரசியல் தலைவர்கள்தான் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தரைப்படை உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மகல் கூறுகையில், ‘‘நமது ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. ஆனால் எல்லையில் நாம் தயார் நிலையில் இருந்ததால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் இனிமேல் அத்துமீறினால், பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வளவு சம்பவங்கள் நடந்தபோதும், காஷ்மீர் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த ராணுவம் உறுதியுடன் உள்ளது’’ என்றார். கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் குஜ்ரால் கூறுகையில், ‘‘எந்த சூழலையும் சந்திக்க கடற்படை தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அத்துமீறினால் அந்த நடவடிக்கையை நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்’’ என்றார்.

பிரச்னை முடிவுக்கு வரும்அதிபர் டிரம்ப் நம்பிக்கை
‘‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பகை விரைவில் முடிவுக்கு வரும்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வியட்நாம் தலைநகர் ஹனாயில் வடகொரிய அதிபர் கிம்பை சந்தித்து பேசிய பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா, பாகிஸ்தானுக்கு உதவ நாங்கள் உண்மையிலேயே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் உண்மையிலலேய நல்ல செய்திகள் உள்ளன. இருநாடுகள் இடையே நீண்டகாலமாக பகை உள்ளது. அது விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்’’ என்றார்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , Pakistan ,overthrown, retaliate,three officers
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...