×

இந்தியா - பாக். இடையேயான சம்ஜோதா ரயில் சேவை நிறுத்தம்

புதுடெல்லி: இந்தியா-பாக். இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜோதா ரயில் சேவையை நேற்று திடீரென இரு நாடுகளும் நிறுத்தியுள்ளன. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் ெகால்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து இரு நாட்டு விமானங்களும் எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்திக்கொண்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை நேற்று திடீரென பாகிஸ்தான் நிறுத்தியது.

வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழன்று சம்ஜோதா ரயில் இயக்கப்பட்டு வந்தது. லாகூரில் இருந்து வாகா வரை இந்த ரயில் இயக்கப்படும். அதன் பின்னர் வாகாவில் இருந்து டெல்லி வரை இந்திய ரயில்வே சார்பில் சம்ஜோரா எக்ஸ்பிரஸ் இயக்கப்படும்.

நேற்று வழக்கம்போல் கராச்சியில் இருந்து சம்ஜோதா ரயில் கிளம்பியது. ஆனால், லாகூர் ரயில் நிலையத்தில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா வருவதற்காக இருந்த 16 பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால் சம்ஜோதா ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பான சூழல் உருவாகும் நிலையில் ரயில் போக்குவரத்து தொடங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவும் சம்ஜோதா ரயில் இயக்கப்படாது என்று அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து எந்த பயணிகளும் வராத நிலையில் ரயிலை இயக்குவதில் எந்த பயனும் இல்லை எனவும், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் தணிந்தபின் ரயில் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சம்ஜோதா ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் இரு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samjhauta , India - Pak. , Samjotha train ,stop
× RELATED சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு...