×

பழநி பங்குனி உத்திர திருவிழா; பக்தர்கள் வருகை குறைவால் 15 டன் வாழைப்பழம் விற்பனையாகாமல் தேக்கம்: வியாபாரிகள் கவலை

பழநி: பழநி தைப்பூச திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை குறைந்ததால், 15 டன் வாழைப்பழம் விற்பனையாகாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழ வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இவ்விழா கடந்த 22ம் தேதி துவங்கி 31ம் தேதி முடிவடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் போன்றவை முறையே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடந்தது. விழாவிற்கு வழக்கமாக சுமார் 15 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். கொரோனா 2வது அலை மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை பாதியாக குறைந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரித்து, முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்களது ஊர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதையொட்டி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வாழைப்பழங்களை விற்பனை செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களை எதிர்பார்த்து வியாபாரிகள் டன் கணக்கில் வாழைப்பழங்களை வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தனர். இந்நிலையில் பக்தர்கள் வருகை குறைந்தததால் வாழைப்பழ விற்பனை கடுமையாக சரிந்தது. இது குறித்து பழநியைச் சேர்ந்த வாழைப்பழ விற்பனையாளர் ஷேக் கூறுகையில், ‘‘பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக கர்நாடக மாநிலம், குடகு மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இருந்து சுமார் 100 டன் மலைவாழைப்பழம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த வருடம் பக்தர்கள் வருகை பாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக சுமார் 15 டன் வாழைப்பழங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ரூ.5க்கு விற்கப்பட்ட மலைவாழைப்பழம், தற்போது ரூ. 1.50க்கு விற்பனை செய்கிறோம். இருந்தும் வாங்குவதற்கு ஆள் இல்லை. பக்தர்கள் கூட்டம் குறைவால் இந்த வருடம் வாழைப்பழ வியாபாரிகளுக்கு ரூ.40 லட்சம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.  …

The post பழநி பங்குனி உத்திர திருவிழா; பக்தர்கள் வருகை குறைவால் 15 டன் வாழைப்பழம் விற்பனையாகாமல் தேக்கம்: வியாபாரிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Palani Bankuni Uttar Festival ,PALANI ,Palanini Tapapuza festival ,Palani Bankuni Uttari Festival ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை