×

மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 சீட்? : இறங்கி வந்த விஜயகாந்த்

சென்னை : அதிமுக கூட்டணியில் மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தேமுதிக 4 சீட் வாங்கிக் கொள்ள ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்கட்டமாக அமைதியாக இருந்த தேமுதிக நிர்வாகிகள், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட சீட் எண்ணிக்கையை பார்த்து அதிர்ந்து விட்டனர். பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக, தேமுதிக இடையே கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது திருநாவுக்கரசர், திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பும் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து விஜயகாந்தை திருப்திபடுத்த வேறு யுக்திகளை கையாள அதிமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதற்குள் விஜயகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாமகவை விட ஒரு தொகுதியாவது அதிகமாக ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தரப்புக்கு கெடுவிதித்தார். ஆனால் விஜயகாந்த் கொடுத்த கெடுவை அதிமுக கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, விஜயகாந்தை சமாதானப்படுத்த பாஜ முயற்சி செய்தது. அதிலும் முரண்பாடு நீடித்தது.

இந்த சூழ்நிலையில், தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது போன்று அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு அதற்கு சமமான தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பை நிர்பந்தப்படுத்தினர். இதனால் அதிமுக கடும் நெருக்கடிக்கு ஆளானது. இதனால் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தரப்புடன் தொலைபேசி மூலம் பேசி வந்தனர். ஆனாலும் கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்தது. இதற்கிடையே 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தேமுதிக சார்பில் விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகளை துரிதப்படுத்தினர். இதன் காரணமாக, கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிடிவி.தினகரன் சார்பில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 15 தொகுதிகளில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து போட்டியிடுவதா அல்லது வேறு அணியில் சேருவதா, 3வது அணியை உருவாக்குவதா. இதில் எந்த முடிவை விஜயகாந்த் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜ மேலிடம் சார்பில் தேமுதிகவுடன் மீண்டும் நேற்று முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்குவது என்றும், தேர்தல் செலவுக்கு பணம் தருவதாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தேமுதிக தரப்பு ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth , 4 seats for DMDK, Vijayakanth came down
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!