×

கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பது எப்படி?: டாக்டர் ஆலோசனை

வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சதத்தை எட்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஜூஸ் கடைகளில் குவிந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் மனிதர்களை வாட்டி வதைக்கும் நிலையில், கால்நடைகளும் பாதிப்பிற்கு ஆளாகிறது. இத்தகைய பாதிப்புற்கு வெப்ப அழற்சி என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெப்ப அழற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேலூர் மண்டல கால்நடை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: கோடை காலத்தில் வெப்ப அழற்சி பாதிப்பு கால்நடைகளை வெகுவாக பாதிக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்ட அரைமணி நேரத்தில் கால்நடைகள் மயங்கி விழுந்து மூச்சு இரைப்புடன் இறக்க நேரிடும். குறிப்பாக கறவை மாடுகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். வெயில் காலத்தில் கால்நடைகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது. கால்நடைகளை வெயிலில் கட்டிவைத்து மேய்ச்சலுக்கு விட்டால் பால் உற்பத்தி வெகுவாக குறையும்.

இதனால் கால்நடைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வெயிலின் தாக்கம் தாளாமல் மயங்கி விழுந்துவிடும். அதுபோன்ற நேரங்களில் உடனடியாக வீட்டில் உள்ள சாக்குபைகளை தண்ணீரில் நனைத்து போர்த்த வேண்டும். குழாய் பைப் மூலம் தண்ணீரை உடல் முழுவதும் பீய்ச்சி அடிக்க வேண்டும். மரத்தின் அடியில் கட்டிவைத்து வைக்கோல், தண்ணீர் இவற்றை வைக்க வேண்டும்.கம்பு, கேழ்வரகு, கோதுமை தவிடு, மக்காச்சோளம், வைக்கோல் இவற்றை உணவாக கொடுக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் கால்நடைகளை குளிக்க வைக்க வேண்டும், இரும்பு, தகரம் ஆகியவற்றால் மாட்டு கொட்டகை அமைத்துள்ள பண்ணையாளர்கள் அதன்மீது தென்னை ஓலைகளை பரப்பி வைக்க வேண்டும். இதனால் வெயிலின் தாக்கம் நேரடியாக கால்நடைகளை பாதிப்பது தடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது கால்நடைகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கடைபிடித்து கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Summer Sun ,Doctor Consulting , Summer sunshine, veterinary, doctor, advise
× RELATED கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில்...