×

திருநீர்மலை பேரூராட்சியில் 10 லட்சத்தில் கட்டப்பட்டது 6 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடை: பொதுமக்கள் வேதனை

பல்லாவரம்: திருநீர்மலை பேரூராட்சியில் 10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம், பணி முடிந்து 6 ஆண்டாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பேரூராட்சி 6வது வார்டு மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை தொடங்கப்பட்டது. பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த ரேஷன் கடையில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், சொந்த கட்டிடம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் செலவில், பேரூராட்சி அலுவலகம் அருகில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

 இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்காததால், பூட்டிேய கிடக்கிறது. 6 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் பாழடைந்து வருகிறது. எனவே, இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘10 லட்சம் செலவில்  கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது.  தற்போதுள்ள ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருப்பதால் முதியவர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, மக்கள் நலன் கருதி பல வருடங்களாக மூடியே கிடக்கும் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : panchayat ,Tirunelveli , Tirunelveli Panchayat, Ration Shop, Public
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு