×

கொலைத்திட்டம் உருவாகும் பார்களை மூடலாமே? மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை: தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கான சதித்திட்டம் தீட்டப்படும் இடமான பார்களை மூடலாமே? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டாஸ்மாக் கடையுடன் சேர்ந்துள்ள பாரில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யவும், காலிப்பாட்டில்களை சேகரிக்கவும் தனிநபர்களுக்கு உரிமம் வழங்கப்படும். தற்போது இந்த உரிமம் வழங்குவதற்கான டெண்டர் தொடர்பாக,  மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிப்.21ல்  ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டார். அதில், உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் பிப்.22 முதல் பிப்.28 வரை விநியோகிக்கப்படும். மார்ச் 1ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் விதிகளில், ரூ.2 கோடி வரையிலான டெண்டருக்கு 15 நாள் அவகாசம் வழங்க வேண்டும்.

ஆனால், பார் தொடர்பான டெண்டருக்கு அந்த கால அவகாசம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனரின் அறிவுறுத்தலின்பேரில் குறைந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விண்ணப்பங்கள் இல்லை எனக்கூறப்பட்ட நிலையில், டாஸ்மாக் இணையதளத்தில் அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும் இயலவில்லை. எனவே, மதுரையில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.  இந்த வழக்கு  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. அதோடு, 2 ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “பார்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள், இழப்புகள் அதிகரிக்கின்றன.

தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? கட்டாயமாக்கினால் யார் எவ்வளவு மது வாங்குகிறார்கள் என்று தெரியவரும். மாணவர்களுக்கும் அச்சம் வரும். டாஸ்மாக் கடையின் நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஏன் மாற்றக்கூடாது? தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூடலாமே? ஏனென்றால் தமிழகத்தில் நடைபெறும் பல குற்றச்சம்பவங்களுக்கு பாரில்தான் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. இங்கு குடித்து விட்டுத்தான் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மேலும் பார்களுக்கான டெண்டர் அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கென வெளியானது ஏன்?  வழக்கமாக ஒரு ஆண்டுதானே வழங்கப்படும். இவ்வாண்டு மட்டும் ஏன் 2 ஆண்டுகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது’’ என சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bar ,Adhar ,government ,Judges ,Tamil Nadu , Murder, bar, mullamalame, aadar card, tamilnadu government
× RELATED பார் ஊழியரை மிரட்டி வழிப்பறி