×

அதிகாலை குளிர்ச்சி நீடித்தாலும் கொளுத்த தொடங்கியது கோடை வெயில் : இன்று முதல் சதம் அடிக்கும்

நெல்லை: கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பனியின் தாக்கம் நீடித்தாலும், இன்று முதல் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசோன் படல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குளிர் காலம் தற்போது முடிவடைய உள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் குளிரின் தாக்கம் நீடித்தாலும், சூரியன் உதயமான பிறகு இந்நிலை மாறிவிடுகிறது.

மே மாதத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் சுட்டெரிக்கும் என்றாலும், மார்ச் முதல் மூன்றரை மாதங்களுக்கு வெப்பத்தின் பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 98.5 டிகிரியாக இருந்தது. இன்று முதல் தமிழகத்தில் வெப்ப அளவு பல நகரங்களில் சதமடிக்கும் என தனியார் வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை (27ம் தேதி) அதிகபட்சமாக வெப்பம் 102 டிகிரியை தொட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சாலையோரங்களில் தற்காலிக குளிர்பான கடைகளும் முளைக்க தொடங்கியுள்ளன. பழங்கள், குளிர்பானங்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : winters , Nellai, Veil, soft drinks
× RELATED வேலூரில் அக்னியின் உச்சம் 112.1 டிகிரி...