×

வராக்கடன் அதிகம்; இந்தியா படு மோசம்: ஐஎம்எப் அறிக்கை

புதுடெல்லி: வராக்கடன் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மோசமான இடத்திலேயே உள்ளது. பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. வராக்கடன் காரணமாக வங்கிகளின் நிதி நிலை படு மோசமாக உள்ளது. வராக்கடன் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவை பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள்தான். இதனால் ஏற்பட்ட நிதி தள்ளாட்டத்தில் இருந்து வங்கிகளை மீட்க மத்திய அரசு மூலதன நிதி வழங்கி வருகிறது. இந்த நிலையில் வராக்கடனில் மோசமாக உள்ள நாடுகளை வரிசைப்படுத்தி சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 137 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வராக்கடனில் மிக மிக மோசமான நாடு என முதல் இடத்தை பிடித்தது உக்ரைன். இதன் வராக்கடன் விகிதம் 54.3 சதவீதம். இதற்கு அடுத்த இடங்களில் சான் மரினோ (ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறிய நாடு) (47.2), கிரீஸ் (44.1), சிப்ரஸ் (36.4), கினியா (30.8) உள்ளன.
 குறைந்த வராக்கடன் விகிதம் உள்ள நாடுகளில் கனடா (0.4 சதவீதம்), கொரியா (0.5), சுவிட்சர்லாந்து (0.6), அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லக்சம்பர்க் (0.9) என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  

வராக்கடன் மோசமாக உள்ள 137 நாடுகளில் இந்தியா 33வது இடத்தில் உள்ளது என ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில், இந்தியாவின் வராக்கடன் விகிதம் 10.3 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய பொருளாதார நாடுகள் பிரிவில் ரஷ்யாவுக்கு (10.7 சதவீதம்) அடுத்து  2வது மோசமான நாடாக இந்தியா உள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. 137 நாடுகளில் இந்தியாவை விட மோசமான வராக்கடன் விகிதம் உள்ள 32 நாடுகளில் 16 நாடுகள் ஆப்ரிக்காவிலும், மற்றவை ஆசியா, ஐரோப்பா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி இந்திய வங்கிகளின் நிகர வராக்கடன் செப்டம்பர் காலாண்டில் 10.8 சதவீதம் எனவும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 11.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,IMF , A straw, India, IMF
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!