×

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து படுகாயம் 1.5 கிமீ தோளில் சுமந்து சென்று பயணியை காப்பாற்றிய போலீஸ்

ஒசாங்காபாத்: ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணியை ஒன்றரை கிமீ  தூரம் தனது தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகிறது. மத்திய பிரதேச மாநிலம், ஒசாங்காபாத் மாவட்டம் அருகே நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென தவறி வெளியே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் பீறிட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை பார்த்ததும், முதலுதவி செய்ய முயன்றனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, அப்பகுதி காவல் நிலையத்தை சேர்ந்த   போலீஸ்காரர் பூனம்சந்த் பில்லூர் விரைந்து வந்தார். விபத்து நடந்த இடத்துக்கு வாகனத்தில் செல்ல முடியாத நிலை இருந்தது.

இதனால், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணியை சிறிதும் யோசிக்காமல், அவர் தனது தோளில் தூக்கிப் போட்டு ஓடத் தொடங்கினார். 1.5 கிமீ தூரத்துக்கு அவரை தோளில் சுமந்து சென்ற பூனம்சந்த், ரயில்வே நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து வாகனம் மூலமாக அந்த பயணி அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கே போராடிக் கொண்டிருந்தாலும், கண்டும் காணாமல் போகக் கூடிய இந்த காலத்தில் ஒன்றரை கிமீ தூரத்துக்கு பயணியை போலீஸ்காரர் தூக்கிச் சென்றதால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சுமார் 1.5 கி.மீட்டர்,  அடிபட்டு கிடந்த பயணியை தோளில் தூக்கி கொண்டு போலீஸ் ஓடிய காட்சிகள், சமூக வலைதளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passenger ,runway , Running train, traveler, saving police
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...