×

சொன்னதை செய்தாரா உங்கள் சிவகங்கை எம்.பி செந்தில்நாதன்?

* சீன் போடும் எம்பி.யால்
* சீரழிந்த சிவகங்கை

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அருகில் இருப்பதால் என்னவோ, சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி தாண்டவமாடுகிறது. இந்த மாவட்டத்துக்கு எப்ேபாதும் ஒரு ராசி உண்டு. அது, எம்பி.யோ, அமைச்சரோ... தொகுதிக்கும்,  மாவட்டத்துக்கும் அவர்கள் நல்லது செய்வதற்குள் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்து விடும். இவர்களோ, தப்பித் தவறி கூட மக்களை பற்றி நினைத்து பார்க்க மாட்டார்கள். நல்லதை செய்யமாட்டார்கள். சொன்னதையும் செய்ய  மாட்டார்கள்.சிவகங்கை  1985ம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 1967ம்  ஆண்டிலிருந்து சிவகங்கை எம்பி தொகுதி உள்ளது. சிவகங்கை மக்களவை  தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர்,  மானாமதுரை  (தனி), சிவகங்கை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் திருமயம்,  ஆலங்குடி தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவை. 2008  தொகுதி மறு சீரமைப்பிற்கு முன்பு சிவகங்கை எம்பி  தொகுதியில் சிவகங்கை,  இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், திருவாடானை ஆகிய 6  சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. கடந்த மக்களவை தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் செந்தில்நாதன். தேர்தலின் போது தொகுதி முழுவதும் சுற்றி வந்து வாக்கு கேட்டவர், வெற்றி பெற்று எம்பி.யான பிறகு தொகுதியையும்  மறந்து விட்டார்; கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்து விட்டார் என்கின்றனர் மக்கள். ‘தொகுதிக்கு செய்யப் போவதாக இவர் கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றவில்லை. தனது சொந்த நலனில் காட்டிய  அக்கறையை தொகுதியின் மீது காட்டவில்லை. தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கண்ணே என்றால், அதை செய்கிறேன்... இதை செய்கிறேன் என எங்களிடமே சீன் போடுவார்’ என்று ஆளும் கட்சி வட்டாரங்களே கூறுகின்றனர்  என்றால், மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யூகிக்கலாம். ‘வர்ற தேர்தல்ல இவரு மட்டும் நின்னாருன்னா? டெபாசிட் கூட கிடைக்காம பண்ணிடுவோம்’ என்று குமுறுகின்றனர். இத்தொகுதியில் பல பிரச்னைகளும்,  எம்பி கொடுத்த வாக்குறுதிகளும் தீர்வுக்காக வரிசைகட்டி நிற்கின்றன.

கடந்த 1994ம் ஆண்டு இத்தொகுதியில் சிவகங்கை கிராபைட்  தொழிற்சாலை தொடங்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும் என  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொழிற்சாலை விரிவாக்கம்  செய்யப்படவில்லை.  இதனால், ஆரம்ப நிலையில் இருந்ததுபோல, சுமார் 200 ஊழியர்களுடனே இன்று வரை  இயங்கி வருகிறது.மாவட்டத்தில் போதிய  வேலைவாய்ப்புகள் இல்லாததால் வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் வேலைக்கு  செல்லும் நிலையிலேயே மக்கள் உள்ளனர். வேலைவாய்ப்புகளை உருவாக்க  மாவட்டம் முழுவதும், அனைத்து  ஒன்றியங்களிலும் சம்பந்தப்பட்ட இடங்களின்  தொழில் வளத்திற்கேற்ப சிட்கோ தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என  நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதை நிறைவேற்றுவதாக எம்பி.யும்  வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை ஒரு தொழில்பேட்டை கூட உருவாக்கப்படவில்லை. விவசாயம், தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டமாகவே பல ஆண்டுகளாக சிவகங்கை தொடர்கிறது. ‘வானம் பார்த்த பூமி’ எனப்படும் சிவகங்கை, முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்டம். பெரிய அளவில் எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லாத இம்மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் கடும்  வறட்சியால் பல ஆண்டுகளாக விவசாயமும் பொய்த்து போனது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வறட்சி மாவட்டம் என்ற பெயர் மாறி, சிவகங்கை செழுமை பெறும். விவசாயம்,  குடிநீருக்கும் இத்திட்டம் பயன்படும். ஆனால், இத்திட்டத்தின் ஆமை வேக பணியால் முழுமையாக நிறைவேறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், காரைக்குடி அல்லது சிவகங்கையில் மத்திய பல்கலைக் கழகம், சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை, எம்பி.யின் வாக்குறுதியிலும் இருந்த நிலையில் எதுவும் நடக்கவில்லை. மதுரை - தொண்டி  ரயில்வே பாதை திட்டம், காரைக்குடி, திருப்பத்தூர் வழி மதுரை ரயில் பாதை திட்டம், காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி வழி திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் வழி தூத்துக்குடி ரயில் பாதை திட்டங்கள் என ஏராளமான  ரயில்வே திட்ட கோரிக்கைகள் இருந்தும் இவற்றில் ஒன்று கூட கண்டு கொள்ளப்படவில்லை.வரலாற்று சிறப்புமிக்க கம்பன், மருதுபாண்டியர் நினைவிட சுற்றுலா மேம்பாடு, மாவட்டத்திற்கென தனி கூட்டுக்குடிநீர் திட்டம் என்பதெல்லாம் கானல் நீராகவே உள்ளது.

* விவசாயம் சார்ந்த மாவட்டத்தில் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை.
* கிராபைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்து இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* சட்டக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம், உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க முயற்சிக்கவே இல்லை.
* முக்கிய ரயில்வே திட்டங்கள், தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் என எதையுமே நிறைவேற்றவில்லை.
* காரைக்குடியில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, சிவகங்கை அருகே முத்துப்பட்டியில்  மத்திய அரசு சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ₹20 கோடி  மதிப்பீட்டில் ஸ்பைசஸ் பார்க், கடந்த 2013ம் ஆண்டு  திறக்கப்பட்டது. வாசனை  பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி,  பெருங்காயம் முதலியவற்றை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங்  செய்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும்  வகையில் இப்பூங்கா  அமைக்கப்பட்டது. பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில்  ஏற்றுமதி வணிகம் மூலம் ₹1,500 கோடி வருவாயும், சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை  வாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்பூங்கா  எவ்வித  செயல்பாடும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கு எம்பி. செந்தில்நாதன்,  முயற்சி செய்யாதது மட்டுமல்ல; தொகுதியில் உள்ள பிரச்னைகள் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் தூங்கி  வழிந்ததால் சீரழிந்து கிடக்கிறோம் என புலம்புகின்றனர் மக்கள். அதேபோல், திருமணவயல் (காரைக்குடி தொகுதி), காளையார்கோவில் (சிவகங்கை தொகுதி), விராச்சுளை(திருமயம் தொகுதி) ஆகிய 3 கிராமங்களை எம்பி செந்தில்நாதன் தத்தெடுத்தார். ஆனால், பிற கிராமங்களைப்போல் எந்த  அடிப்படை வசதியும் இல்லாத நிலையில்தான் இந்த 3 கிராமங்களும் உள்ளன. வளர்ந்து வரும் காளையார்கோவிலுக்கு சாலை, பஸ் ஸ்டாண்ட், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை  மேற்கொள்ளப்படவில்லை.

எதிர்க்கட்சியாக இருந்துஎன்ன செய்ய முடியும்?
சிவகங்கை தொகுதியில் தனது பதவிக்காலத்தில் செய்த நன்மைகள் குறித்து எம்பி செந்தில்நாதன் அளித்த பேட்டி:
சிவகங்கை மாவட்டத்திற்கு பாஸ்போர்ட் அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட ரஸ்தா, ராமநாதபுரம் சாலைப்பணிகள், மானாமதுரை, தஞ்சாவூர் தேசிய  நெடுஞ்சாலைப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளேன். தஞ்சாவூர் முதல் சாயல்குடி வரையிலான சாலை. தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசில் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால் தொகுதிக்கு  தேவையான முக்கிய திட்டங்களை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது. தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு சார்பில் எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களில் வளர்ச்சிப்பணிகளை செய்ய  முடியவில்லை.

பாஸ்... ரொம்ப க்ளோஸ்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக.வில் பிளவு ஏற்பட்டபோது, தொடக்கத்தில் டி.டி.வி.தினகரன் அணிக்கு போகலாமா என மதில் மேல் பூனையாக தவித்தார். கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தவர், டிடிவி தனிக்கட்சி  தொடங்கியவுடன் அதிமுக.விலேயே செட்டிலாகி விட்டார். சிவகங்கை மாவட்ட அமைச்சரான பாஸ்கரனுடன் இவர் ரொம்ப க்ளோஸ்.. அவருடன் இணக்கமாக இருந்து அனைத்து கான்ட்ராக்ட் பணிகளிலும் தேவையான கமிஷன்  மற்றும் தேவையான காரியங்களை சாதித்து கொள்கிறார் என்பதே கட்சிகாரர்களின் முணுமுணுப்பாக உள்ளது.

அதிமுக‘அமாவாசை...’
‘அமைதிப்படை’ படத்தில் தன்னை எம்எல்ஏ.வாக்கி அழகு பார்த்த மணிவண்ணனை, ஓரங்கட்டி அரசியலில் முன்னேறுவார் அமாவாசை கேரக்டரில் நடித்த சத்யராஜ். அதே கதைதான் செந்தில்நாதன் மேட்டர்லயும் நடந்திருக்கு...  முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரான சுப.கருப்பையா மூலம்தான் அரசியலுக்கே இவர் வந்தார். பிறகு, தேவகோட்டை அம்மா பேரவை செயலாளரானார். பின்னர், சுப.கருப்பையாவிற்கு எதிராகவே காய் நகர்த்தி கட்சியின்  ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், எம்பி என படிப்படியாக பதவி உயர்விற்கு வந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Senthilnathan ,Sivagangai , Sivagangai MP, Senthilnathan?,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி