×

பர்கூர் மேற்கு மலைக்கு அரசு பஸ் வெள்ளோட்டம்

அந்தியூர் :  பர்கூர் மேற்குமலை பகுதியில் அரசு பஸ் நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மேற்குமலை தாமரைகரையில் இருந்து 20 கி.மீ. தூரத்துக்கு மலைப்பகுதி ரோடு உள்ளது.  இங்குள்ள மணியாச்சிபள்ளம் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு பாலம் அமைக்கப்பட்டு புதிய தார்ச்சாலை போடப்பட்டது. இங்கு தாமரைக்கரை, தொல்லிப்பிரிவு, ஓசூர், கோயில்நத்தம், செங்குளம், கொங்காடை காலனி, கொங்காடை உள்ளிட்ட பகுதிகளில் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து அந்தியூர் சென்று வந்தனர். இதனால், மேற்குமலையில் பஸ் இயக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அரசு சார்பில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி,  ஊட்டியில் இயங்கி வந்த அரசு பஸ் ஒன்றை தயார் செய்து தாமரையில் இருந்து கொங்காடை வரை நேற்று வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. மலைவாழ் மக்கள்  ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஆரத்தி எடுத்து பஸ்சை வரவேற்றனர்.

இதுகுறித்து அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் கூறுகையில்,`இப்பகுதி மலைவாழ் மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பஸ் விரைவில் நிரந்தரமாக இயக்கப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bargar West Hill , Government bus ,journey ,West Hill
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...