×

கொத்து, கொத்தாய் தொங்கும் காய்கள் இலவம் விவசாயம் போடியில் அமோகம்

* விவசாயிகள் மகிழ்ச்சி

போடி :  போடி பகுதியில் இலவம் காய் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி பகுதியில் முந்தல், பிச்சாங்கரை, அடகுபாறை, குரங்கணி, கொட்டகுடி, ஊத்தாம்பாறை, வடக்குமலை, தெற்கு மலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இலவம் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஒவ்வொரு இலவம் மரங்களிலும் காய்கள் அதிக அளவு விளைச்சல் கண்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் சரிவர மழை இல்லாதால் மரங்களில் சரிவர பூ பூக்காமல் இலவம் காய்கள் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். ஒரு ஏக்கருக்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள்  நடப்படுகிறது. போடி பகுதியிலுள்ள வியாபாரிகள் ஆண்டு 3 மாத சீசனை பயன்படுத்தி மரத்திலே இலவம் காய்களை காய விட்டு நெற்றாக்கி இலவம் பஞ்சாக பறித்து மெத்தை,  தலையணை தைப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அதனால் போடி பகுதியில் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெத்தை வியாபாரிகளும், இலவம் மரங்களைப் பார்வையிட்டு 3 மாதங்களுக்கு முன்பே விவசாயிகளிடம் முன்தொகை கொடுத்து முன்பதிவு செய்கின்றனர்.

 கோடை காலத்தில் மே மாதம் முதல் வாரத்தில் துவங்கும் சீசன் 3 மாதம் வரையில் தொடர்ந்திருக்கும். நடப்பாண்டில் இலவம் காய்கள் மரத்தில் கொத்து, கொத்தாக காய்த்து தொங்குகிறது. ஒரு கிலோ கொட்டை இலவம் பஞ்சு 100 ரூபாய்க்கு விற்கிறது. சீசன் துவங்கினால் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு நிலையான தன்மைக்கு வழிகாட்டும்.
இதுகுறித்து இலவம் விவசாயியும், பஞ்சுபேட்டை உரிமையாளருமான போடி இஸ்மாயில் கூறுகையில், `` பஞ்சுபேட்டை தொழிலை 70 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறோம்.

போடி பகுதியிலும், தேனி மாவட்ட அளவிலும் இலவம் காய்களை விவசாயிகளிடம் வாங்கி மெத்தைகள் தயாரிக்கிறோம். கடந்த காலங்களில் சரிவர மழை இல்லாததால் இலவம் விவசாயம் ஏனோ, தானோவென இருந்தது.  இந்த ஆண்டு நல்ல மழையும், நல்ல குளிரும் இருப்பதால் இலவம் விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதால் விளைச்சல் நன்றாக உள்ளது’’ என்றார்.

போடி விவசாயி கிருஷ்ணன் கூறுகையில், `` தேனி மாவட்டத்தில் போடி தான் இலவம் விவசாயத்தில்  முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு பல ஏக்கர் கணக்கில் இலவம் மரங்களை குரங்கணி., கொட்டகுடி மலைப்பகுதிகளிலும் தரைப்பகுதிகளிலும் விவசாயிகள் வளர்க்கின்றனர். கடந்த காலங்களில் விளைச்சலுக்கேற்ப செலவு இருந்ததால் நஷ்டத்தினை விவசாயிகள் சந்தித்தனர். தற்போது இயற்கையின் கொடையால் மழையும், குளிரும் சரியாக இருப்பதால் இலவம் மரத்தில் காய்கள் கொத்து, கொத்தாக காய்துள்ளதை பார்க்கும் போது எதிர்கால நடப்பு சீசன் பிரகாசமாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farm , agriculture,farm ,Ilavam,field
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி