×

புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த  பாய்லர், விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் விரைந்து கம்பெனிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர், மண்டையூர், நல்லூர் என திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறங்களிலும் சிறியது முதல் பெரியது வரை 150க்கும் மேற்பட்ட கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனிகளில் பாய்லர் தயாரிப்பு, விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு தேவையான இரும்பு தூண்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தயாரிப்புகளும் செய்யப்பட்டு வந்தது.

இந்த கம்பெனிகளில் பிட்டர், வெல்டர், கிரண்டர் மற்றும் தொழிலாளிகள் என 8 ஆயிரம் பேர் நேரடியாக பணியாற்றி வந்தனர். மேலும் இந்த கம்பெனிகளில் மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள் என ஆயிரம் பேர் அலுவலர்களாக பணியாற்றி வந்தனர். இதேபோல் அவர்களுக்கு தேவையான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் பேர் மறைமுகமாக பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பணிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணிக்கு வந்து சென்றனர்.

இதே போல திருச்சி மாவட்டத்தில் இருந்து திருச்சி நகர், திருவெறும்பூர், மனிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணிக்கு வந்து சென்றனர். குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்த கம்பெனிகளில் முன்னுரிமை வழங்கி பணிகள் வழங்கியது. இதனால் அந்த பகுதியில் படித்தவுடன் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. தனியார் கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிஎச்இஎல் நிறுவனம் மூலம் பல ஆயிரம் கோடிக்கு ஒப்பங்கள் வழங்கப்பட்டது. பிஎச்இஎல் நிறுவனம் வழங்கிய ஒப்பந்தங்களை பெற்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிகளை முடித்து அவர்களிடம் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதற்கான தொகையை வழங்குவார்கள்.

இப்படித்தான் இந்த கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. இதனால் இந்த கம்பெனிகளில் இரவு பகல் பாராது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் வேலைக்கு ஆட்கள் தேவை அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக இந்த கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தபோது அங்கு பணிகள் செய்ய ஒப்பந்தம் வழங்கப்படும். ஒப்பங்களை பெற்றவர்வர்கள் 50 பணியாளர்களை வைத்து பணியாற்றுவார்கள். இப்படி ஒருவரே 3 அல்லது 4 கம்பெனிகளில் ஒப்பந்தம் எடுத்திருப்பார். அவரிடம் சுமார் 150 முதல் 200 பேர் பணியாற்றுவார்கள். இதனால் அவர் அதன் உரிமையாளராக  திகழ்வார். இப்படி பல பேர் பலருக்கு வேலை வழங்கி முதலாளியாக இருந்தனர். கம்பெனிகளை மூடியதால் முதலாளிகள் தொழிலாளர்களாக மாறிவிட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கை, கொள்கை முடிவால் பிஎச்இஎல் நிறுவனம் தனியார் கம்பெனிகளுக்கு வழங்கிய ஒப்பந்ததை திடீரென நிறுத்தியது. இதனால் கடந்த 2012ம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த கம்பெனிகள் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியது.  இந்த கம்பெனிகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இப்படி படிப்படியாக கம்பெனிகள் மூடப்பட்டதால் தற்போது கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த கம்பெனிகளில் பணியாற்றிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது பணியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஒரு சில கம்பெனிகள் அவர்களின் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி செயல்பட்டு வந்தாலும் அவர்களால் முன்பு வழங்கியதுபோல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியவில்லை. இந்த வேலையிழப்புக்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கொள்கை முடிவுதான்.

அவர்களின் அந்த முடிவின் காரணமாக பிஎச்இஎல் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கவில்லை. இதனால் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இதற்கு மாநில அரசு தகந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து இந்த கம்பெனிகளில் ஒப்பந்தம் எடுத்து பணிகளை முடித்து கொடுத்த தன்ராஜ் கூறியதாவது: மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த கம்பெனிகள் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கம்போது குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து கொடுக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் கொடுக்கும் மெட்டீரியல், மேப்பை வைத்து நாங்கள் எங்கள் பணியாளரிடம் ஒப்படைப்போம். அதில் பிட்டர், வெல்டர், கிரைண்டர், கட்டர் என பல பிரிவுகளில் பணியில் இருப்பார்கள்.

அவர்கள் விரைந்து பணியை முடித்து கொடுப்பார்கள். இப்படி அனைவருக்கும் வேலை வழங்கிய கம்பெனிகள் பிஎச்இஎல் நிறுவனம் தன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் எங்களுக்கு வேலையிழப்பு வந்தது. அதுவரை முதலாளியாக இருந்த நாங்கள்  தொழிலாளியாக மாறிவிட்டோம். நான் மாற்று பணியை தேடி சென்றுவிட்டேன். ஆனால் என்னை போன்ற சிலர் என்ற செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தது.2013 முதல் 2017 வரை இந்த தொழில் பெரிய பின்னடைவை சந்தித்தது. தற்போது ஒரு சில கம்பெனிகள் செயல்பட்டாலும் அவர்களால் தகுந்த ஊதியம் வழங்க முடியாவில்லை. அப்போது ரூ.200 ஊதியத்திற்கு பணியாளர்கள் கிடைத்தனர். தற்போது ரூ.500 கொடுத்தாலும் கிடைக்கவில்லை. இதனால் அதற்கு ஏற்றார்போல் தயாரிப்புகளுக்கு தொகை அதிகரிக்க வேண்டும். இப்படி பல பிரச்னைகளால் பல கம்பெனிகள் மூடுவிழாவை கண்டுவிட்டது. இதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கம்பெனிகளில் பணியாற்றிய பொறியாளர் மூர்த்தி கூறியதாவது: இந்த தொழில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து பல்வேறு மாற்றங்களை கண்டுவிட்டது. அரசின் கொள்கை முடிவு என்ற ஒற்றை வார்த்தை பல ஆயிரம் பேரை வேலையின்றி நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. இதற்கு பல காரணங்களை பலர் கூறுகின்றனர். குறிப்பாக இந்த கம்பெனிகளில் பணியாற்றிவர்கள் பலர்  விவசாய குடும்பங்களை சார்ந்தவர்கள். இவர்கள் காலையில் விவசாய பணியை கவனித்துவிட்டு கிடைக்கும் நேரத்தில் கம்பெனிகளுக்கு வந்த பணிகளை மேற்கொண்டனர். தற்போது விவசாயமும் பொய்த்துவிட்டது. கம்பெனிகளில் வேலையும் இல்லை.இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துவிட்டது. இதனை வார்த்தைகளால் தெளிவுபடுத்த முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் கம்பெனிகள் செயல்படுவதற்கு தகுந்த உத்தரவாதத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maturai ,Navodaya Close Closure , Pudukottai, spare parts,workers
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...