×

விநியோகத்தில் அரசியல் தலையீடு இலவச மாடு திட்டத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருப்புவனம் அருகே இலவச மாடு வழங்கும் திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பாட்டம் கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: எங்கள் கிராமத்தில் அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு விதிப்படி இத்திட்டத்தில் கணவனை இழந்தோர், விவாகரத்தான பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பயனாளிகளுக்கு ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம் சொந்தமாக இருக்கக்கூடாது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அனைவருக்கும் தெரியப்படுத்தி, கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால் பாட்டம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 50 பயனாளிகளில் 27 பேர், ஒரு ஏக்கருக்கு அதிகமாக சொந்த நிலம் வைத்திருப்பதோடு, நன்கு வசதி படைத்தவர்கள். பயனாளிகள் தேர்வு பட்டியலில் அரசியல் தலையீடு உள்ளது. முழு தகுதியுடையோரின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. எனவே, பயனாளிகளின் பட்டியலை ரத்து செய்து, தகுதியுடையோரை கொண்ட  புதுப்பட்டியல் தயாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்து, ‘‘சிவகங்கை மாவட்டம், பாட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Intervention ,High Court , Political intervention, free cow program, interim restraint
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...