×

சென்னையில் பதற்றமான 607 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் 607 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நேற்று நடந்தது. எழும்பூரில் உள்ள மாநில மகளிர் பள்ளியில் நடந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக அதிக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், தி.நகரில் குறைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது. 16 வேட்பாளர்கள் என்றால் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். 32 வேட்பாளர்கள் என்றால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதன்படி கொளத்தூர் தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. தி.நகரில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 607 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளோம். அதேபோன்று பணம் பெறுபவர்கள் பணம் கொடுப்பவர்களுகளுக்கு ஒத்துழைப்பதால் சிறு சிறு பரிமாற்றங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களில் 55 சதவீதம் பேர் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தி உள்ளனர். வாக்களிக்காதவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்புகள் அளிக்கப்படும். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறுவதில் 7,300 பேரில் இதுவரை 6,156 பேரிடம் பெறப்பட்டுள்ளது. இன்று வரை இந்த பணி நடைபெறும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறினார்….

The post சென்னையில் பதற்றமான 607 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Prakash ,
× RELATED சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430...