×

தமிழகம் முழுவதும் சவுடு மண் எடுப்பதில் 10 ஆயிரம் ஏரிகளில் முறை வைத்து அரசியல்வாதி, அதிகாரிகள் கொள்ளை


* தனியார் பாக்கெட்டுக்கு சென்ற பல கோடி
* மண்ணை சுரண்டியது எப்படி

சிறப்பு செய்தி
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் சவுடு மண் எடுப்பதில் அரசியல்ாதிகள், அதிகாரிகள் முறை வைத்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதால் அரசு கஜனாவிற்கு வரவேண்டிய கோடிக்கண பணம் தனியார் பாக்கெட்டிற்கு சென்று நகை, பண்ணை பங்களா, ஷேர் மார்ககெட்டில் பதுங்கி இருக்கிறது என்கிற பகீர் தகவல் அம்பலமாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் 39,202 ஏரிகள் உள்ளன. அதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை 14,098 ஏரிகள். மீதமுள்ளவை உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்து வருகின்றன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் பல உள்ளாட்சி ஏரிகளில் மண் மூடி தற்போது தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல கோடி மதிப்புள்ள கட்டிடங்களாக மாறிவிட்டன. இருக்கும் சில ஏரிகளும் தனது முழு கொள்ளவை இழந்து விட்டது. இதனால், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரில் பாதிக்கும் மேல் வீணாக கடலில் கலக்கிறது.

இந்த ஏரிகளின் கொள்ளளவை மீட்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ஏரிகளில் மண் எடுக்கப்படுகிறது. இதற்காக, கலெக்டர், கனிமவளத்துறை ஒப்புதல் பெற்று பொதுப்பணித்துறை, உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மணல் அள்ளப்படுகிறது. இந்த மணல் ஒப்பந்த நிறுவனம் மூலம் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை மேம்படுத்துவதாக கூறி அங்கிருந்து விதிமுறைகளை மீறி தாறுமாறாக மணல் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 4 ஆயிரம்: அடையாற்றில் கடந்த 2017ல் 4 ஆயிரம் லோடு மணல் எடுக்க மட்டுமே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லோடு என மாதத்துக்கு லட்சக்கணக்கான லோடு மணல் லாரிகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது. அதற்கு பில் இல்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அதே சமயம் சென்னை மாவட்ட எல்லை பகுதிகளான ஜாபர்கான்பேட்டையில் விதிமுறை மீறி மணல் அள்ளப்பட்டது.
 
அதே போன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் உள்ள மண்ணை எடுத்து விற்பனை செய்ய தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஏரிகளில் இருந்து தினமும் 1000 லோடு முதல் 2000 லோடு வீதம் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர். அரசு நிர்ணயித்த விலைப்படி ஒரு யூனிட் ரூ.356க்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால், ரூ.4 ஆயிரம் வரை தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, பொத்தூர், கரடிபுதூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் மணல் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. டூப்ளிகேட் ரசீது: மணல் விலைக்கான உரிய ரசீதும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் வழங்கப்படவில்லை. 2 யூனிட் ரசீது பெற்று கொண்டு 8 யூனிட் மணல் வரை ஏற்றப்படுகிறது. 6 யூனிட் மணல் கணக்கில் கொண்டு வராமல் வெளியே கொண்டு செல்லப்படுகிறது.  

இந்த மணல் கொள்ளையில் ஆளும் கட்சியினர், கனிம வளத்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைகோர்த்து கொண்டு இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசுக்கு பல நூறு கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளோடு முறை வைத்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.  தற்போது, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மணல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சவுடு மண் மட்டும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, நீர்நிலைகளை மேம்படுத்துவதாக கூறி தனியார் மூலம் சவுடு மண் அள்ள ஒப்பந்தம் விடப்படுகிறது. அவ்வாறு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் விதிமுறைப்படி மணல் அள்ள வேண்டும் ஆனால், அவர்கள் விதிமுறையை மீறி ஒரு நாளைக்கு ஒரு ஏரியில் இருந்து ஆயிரக்கணக்கான லோடுகள் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர். மேலும் அந்த மணலை அரசு நிர்ணயித்த விலைக்கு பதிலாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். மேலும், அந்த விலைக்கு ஒப்பந்த நிறுவனம் சார்பில் உரிய ரசீதும் வழங்கப்படுவதில்லை. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசே சவுடு மண்ணை எடுத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளில் அதிகளவில் மணல் அள்ளுவது தடுக்கப்படும்’ என்றார்.

முறையிட்டும் பயனில்லை தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:
சவுடு மண் 2 யூனிட் ரூ.170 முதல் 700 வரை அரசு நிர்ணயித்துள்ளது. இதை, ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் 2 யூனிட் ரூ.4 ஆயிரம் வரை விற்கின்றனர். நான் இது தொடர்ாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் முறையாக பதில் தரவில்லை. மேலும், மணல் விற்பனை செய்ததற்கான பில்லில் பணம் எவ்வளவு என்று இல்லை. அதிகாரிகளின் பச்சை இங்க் கையெழுத்து இல்லை. ரூ.4 ஆயிரம் கொடுத்து எவ்வளவு மணல் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்று ஒப்பந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர். ஆவடி தாலுகா பொத்தேரி பகுதியில் தினமும் ஆயிரம் லோடு, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கரடிபுதூர் ஏரியிலும் தினமும் ஆயிரம் லோடு சவுடு மண் எடுக்கப்படுகிறது. இது போன்று தான் தமிழகம் முழுவதும் மணல் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இது போன்று முறைகேடாக மணல் அள்ளுவதை தடுக்க சவுடு மண் அரசே விற்பனை செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : politician ,lakes ,Tamil Nadu , Tamil Nadu, Sleet Soil, 10 thousand lakes, politician, officers, robbery
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...