×

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் கருவாடு உற்பத்தி குறைவு : வியாபாரிகள், தொழிலாளர்கள் வேதனை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் கருவாடு உற்பத்தி குறைந்ததால் கருவாடு வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் மூலம் விசைப்படகுகள், பைபர்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்தில் கடலில் குறைவான சிறு மீன்களே கிடைப்பதால் கருவாடு போதிய அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாமல் போனது. இதனால் வியாபாரிகளும் தொழிலாளர்களும் வேதனை
யடைந்துள்ளனர்.

இது குறித்து பழையாறு கருவாடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பொன்னையா கூறுகையில், பழையாறு துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகின் மூலம், ஒவ்வொரு படகிற்கும் சிறு சிறு கசார் என்று சொல்லப்படும் சுமார் 40 வகையான மீன்கள் குறைந்த அளவே கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 8 டன் கருவாடுகள், வீதம் கோழி தீவனத்திற்காக மட்டும் நாமக்கலுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்பொழுது மீன்வரத்து குறைவாக இருப்பதால் ஒரு வாரத்திற்கு 8 டன்  மட்டுமே நாமக்கலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் உணவுக்காக உலர வைக்கப்படும் கருவாடுகள் வாரத்திற்கு ஒரு டன் கூட கிடைக்கவில்லை. இதனால் கருவாடு வியாபரிகள் மற்றும் தொழிலாளார்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் என்றார். பெரிய மீன்கள் அதிக அளவில் கிடைக்காததற்கு அதிவேக விசைப்படகுகளும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதுமே காரணமாகும். எனவே தடை செய்யப்பட்ட அதிவேக விசைப்படகுகளையும் சுருக்குமடி வலைகளைப் பயனப்டுத்துவதையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழையாறு விசைப்படகு உரிமையாளார் சங்கத்தலைவர் அருள்செழியன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : harbor ,Palaiyar ,Kollam ,Merchants , kollidam, dried fish, merchants
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...