×

கோவையில் கோடைக்கு முன்பே வெயில் தாக்கம் அதிகம்: குழந்தைகளை கவனமா பாத்துக்கோங்க...

கோவை: குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கோவையை பொறுத்தவரையில் ஏப்ரல்-மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் அடிக்க தொடங்கி விட்டது. கோவை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் காலகட்டத்தில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டாக்டர்கள் கூறியதாவது: கோடை காலத்தில் பொதுமக்கள் சின்னம்மை நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். இதனை சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். முதலில் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை உண்டாகும். தொடர்ந்து, தோலில் தட்டை வடிவ தழும்புகள், கொப்புளங்கள் மற்றும் புண்கள் என்ற மூன்று நிலைகளில் இந்த நோயின் தாக்கம் இருக்கும். இருமல், தும்மல் வழியாக வரும் எச்சில் மூலம் இந்த நோய் பரவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவர்களுக்கு சக குழந்தைகள், மாணவர்களிடம் இருந்து எளிதாக இந்த நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. ஒரு முறை இந்த நோய் தக்கப்பட்டு குணமடைந்தவருக்கு மீண்டும் இதே நோய் தாக்குவது 60 சதவீதம் குறைவு.

வரிசெல்லோ வேக்சின் என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடுவதன் மூலம் இந்த நோய் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். பெரியவர்கள் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடுப்பூசியை போடலாம். இந்த நோய் தாக்கியவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் அவர்களது முதுகு தண்டுவடத்தில் அக்கி என்று கூறப்படும் கொப்புளங்கள் ஏற்பட்டு விடுகிறது. பொதுமக்கள் இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவும்.

இதே போல், உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள், வியர்க்குரு, தோல் அரிப்பு, சிறுநீட் கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இந்த வெயில் காலத்தில் ஏற்படும். இதனை தவிர்க்க அதிக நீராகார உணவுகளை உட்கொள்ள வேண்டும். தர்பூசணி, இளநீர், நுங்கு உள்ளிட்ட பொருட்களை அதிகமாக உண்ணலாம். வெளியில் செல்லும்போது குளிர்பானங்களை அருந்தாமல் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். எண்ணெய்யில் பொறித்த பலகாரங்களை தவிர்க்கவும். தளர்வான ஆடைகளை அணிந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்கவும். கருப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டது. வெள்ளை நிற ஆடைகளை அணியலாம். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goa ,children , Child, winter, summer
× RELATED விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர்...