×

கோபி அருகே அதிக வெடி வைத்ததால் பாறைகள் உடைந்து சிதறி 3 பெண்கள் காயம் : 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

கோபி: கோபி அருகே விவசாய நிலத்தில் உள்ள பாறைகளை உடைக்க கூடுதலாக வெடி வைத்ததால் வெடித்து சிதறிய பாறைகள் வீடுகள் மீது விழுந்தது. இதில் 3 பெண்கள் காயமடைந்தனர், 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் காலனியில் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் அனைவருமே கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். பெரியார் நகர் அருகிலேயே 9 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கு கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறை சார்பில், நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது.

இந்த 9 ஏக்கர் நிலத்தில் பெரும்பகுதி பாறையாகவே உள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தின் அருகே 16 ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் வேளாண் வணிக வளாகமும், நெல் கொள்முதல் மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த நிலத்தினை சமன் செய்து, விவசாயம் செய்யும் வகையில் நிலத்தை பயன்படுத்தி வந்தவர்கள் கடந்த ஒரு மாதகாலமாக பொக்லைன் இயந்திரம் மூலம் வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக பாறையை வெடி வைத்து உடைத்தும் வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பெரியார் நகர் குடியிருப்பு அருகே இருந்த பாறையை வெடி வைத்து தகர்த்துள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கிராம மக்களை எச்சரிக்கை செய்யாமலும், பாதுகாப்பு நடவடிக்கை செய்யாமல், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வெடிமருந்தை பயன்படுத்தி பாறைகளை உடைத்துள்ளனர்.

இதில் வெடித்து சிதறிய பாறைகள் அருகில் இருந்த 15க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற் கூரைகள் மீது விழுந்ததில் கூரைகள் சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த ராமாயி (60), சிவகாமி (35) உள்ளிட்ட 3 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிச்சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோபி இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதகாலமாக பாறைகளை வெடி வைத்து தகர்த்து வருகின்றனர். வெடி வைப்பதற்கு முன்னர் கிராம மக்களிடம் எவ்வித தகவலும் கூறுவதில்லை. இந்நிலையில் (இன்று) நேற்று அதிகளவு வெடி மருந்தை பயன்படுத்தியதால், உடைந்து சிதறிய பாறைகள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று வீடுகளின் கூரை மேல் விழுந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த 3 பெண்கள் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போன்று வருவாய்த்துறையினர், நிலத்தை பயன்படுத்தி வருபவர்களுக்கு கொடுத்த நிபந்தனை பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

இயந்திரங்கள் சிறைபிடிப்பு

பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால் வீடுகள் சேதமடைந்ததாலும், பெண்கள் காயமடைந்ததாலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பாறைகளுக்கு வெடி வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட கம்ப்ரசர் வண்டியை சிறைபிடித்து சக்கரத்தில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர். அதே போன்று அங்கு உடைத்த பாறைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநர் கிராம மக்கள் வருவதை பார்த்ததும், இயந்திரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்த தப்ப முயன்றார். அதை பார்த்த கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை பொது மக்கள் சிறைபிடித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : explosions ,women , Kobe, rocks, women
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ