×

சித்தூரில் இருந்து தச்சூர் வரை விவசாயிகளை ஒடுக்கும் 6 வழி அழிவுச் சாலை யாருக்கு? : எதிர்ப்பையும் மீறி நிலத்தை அளவீடு செய்யும் அரசு

சென்னை : இயற்கை வளங்களை, விவசாய நிலங்களை, நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி, சித்தூர் - தச்சூர் 6 வழிச்சாலையை கொண்டுவருவதில், நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக உள்ளனர். இதற்கு, திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடும் எதிப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். தமிழகத்திற்கு வடக்கேயுள்ள மாநிலங்களில் இருந்து, சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும், நெரிசலின்றியும் வருவதற்காக பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் வரை 126 கி.மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சாலை ஆந்திராவில் 82 கி.மீட்டரும், தமிழ்நாட்டில் 44 கி.மீட்டர் தூரமும் பயணிக்க உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் இந்த சாலை ரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியாக தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில் ஏற்கனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது. இந்த சாலை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.3,197 கோடி. இந்த சாலை என்எச்.716 என்று அழைக்கப்படும். மொத்தமாக 2,186 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். அதில் 889 ஏக்கர் நிலம் தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது. காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சரக்கு வாகனங்கள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக இந்த சாலை அமைக்கப்படுகிறது. சென்னை மற்றும் பெங்களூர் விரைவு வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி மற்றும் மகேந்திரா வேல்சிட்டியை இந்த சாலை இணைக்கும். பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவே இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த 6 வழிச்சாலை அமைவதன் மூலம் சென்னை மாநகரத்திற்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை ரூ. 3,200 கோடி செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பு பணிக்காக புலிக்குன்றம் வனப்பகுதியில் 32 ஹெக்டேர் நிலம், சாலை யோரம் உள்ள பகுதியில் 886 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலையில் 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள் கட்டப்படும். இந்த சாலை அமைந்தால் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். மத்திய - மாநில அரசுகளின் அனுமதியின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் கொக்கரிக்கின்றனர்.

உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என மத்திய அரசு கூறுகிறதே தவிர யாருடைய வளர்ச்சி என்பதை கூறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு விவசாயத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 2.12 லட்சம் கோடி. பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் விவசாயத்தை திட்டமிட்டு புறக்கணித்ததின் விளைவுதான் நாடெங்கும் தொடரும் விவசாயி தற்கொலைகள். விபத்துகளை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறி வருகிறது. விபத்திற்கு முக்கிய காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், ஓட்டுநர்களின் பணிச்சுமையும்தான் என பல்வேறு ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதனை எல்லாம் சிறிதளவும் மதிக்காமல், மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அரசுக்கு  மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது. இந்த 6 வழிச்சாலையில் பயணிக்கப் போவது யார். பெரும்பாலும் கம்பெனிகளின் உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லவும், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும், பணக்காரர்களும் தங்கு தடையின்றி விரைவான பயணம் மேற்கொள்ள மட்டுமே பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.இந்த திட்டம் தங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை நன்கு உணர்ந்த விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்க்கின்றனர். வளர்ச்சி என்ற பொய்யான கோஷத்தை நம்பி ஏற்கனவே நிலங்களை இழந்த மக்கள் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் போராட்டங்கள்

சித்தூர் - தச்சூர் 6 வழி சாலை திட்டத்திற்காக கையகப்படுத்த நிலம் அளவிடும் பணிகள் துவங்கியுள்ளன. இச்சாலை அமைத்தால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், மரங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்படும். இதனால் இந்தச் சாலை திட்டம் தேவையில்லை என கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்திமேனிகுப்பம், காக்கவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் உட்பட பல கிராம மக்கள் சேர்ந்து, மாற்றுப் பாதையில் சாலை அமைக்கக் கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்துக்கேட்பு கூட்டங்களையும் புறக்கணித்து வருகின்றனர். ஆனால், இதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் அவர்களின் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பல கிராமங்களில் நிலம் அளவிடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இனியாவது, மாற்றுவழியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலம் அழியும் அபாயம்

சித்தூர் - தச்சூர் 6 வழிச்சாலை அமைக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 889 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 64 சதவீதம் விவசாய நிலமாகும். மூன்று போகமும் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்த, பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘’ஆறு வழிச்சாலை என்ற பெயரில் நிலங்களை கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள். விவசாய நிலத்தை நாங்கள் வழங்கிவிட்டு, மண் சோறையா சாப்பிட முடியும். எங்களது எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் தற்கொலை செய்துகொள்ள கூட தயாராக உள்ளோம்’’ என கதறினர்.

86 ஏக்கர் காடுகள் அழிப்பு? இயற்கை ஆர்வலர்கள் வேதனை

திருவள்ளூர் மாவட்டம் புலிக்குன்றம் காப்புக் காட்டின் 86 ஏக்கர் நிலம் இதற்காக அழிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. காடுகளை அழிப்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் கரடி, மான், நரி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. வன நிலங்களை கையகப்படுத்தும்போது, வனத்தில் இருக்கும் விலங்குகள் சாலைக்கு வந்து வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவம் நிகழும்.

மேலும், வாகனங்களின் இரைச்சல் சத்தம் அதிகரிக்கும்போது, பறவைகள் இடம் பெயர்ந்துவிடும். தற்போது 6 வழிச்சாலை அமைத்தால், இயற்கை வளம் முழுமையாக பாதிக்கும். இதனால் மழைப்பொழிவு குறைந்து வறண்ட பூமியாக திருவள்ளூர் மாவட்டம் மாறும்.எனவே, இயற்கை கொடுத்த கொடையான காட்டினை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையோரம் 25,200 மரங்கள் வெட்டப்படும்

சித்தூர் - தச்சூர் 6 வழிச்சாலை என்ற பெயரில் ரூ.3,200 கோடி செலவு செய்து, மழை தரக்கூடிய வனப்பகுதிகளையும் , விவசாயத்தையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய சாலை அமைப்பது யாருடையை வளர்ச்சிக்கானது. இத்திட்டத்தால், திருவள்ளூர் மாவட்டம் புலிக்குன்றம் காப்புக் காட்டின் 86 ஏக்கர் நிலம் அழிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 27 நீர் நிலைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதோடு, சாலை ஓரங்களில் உள்ள 25,200 மரங்கள் வெட்டப்படும்.மேலும், மக்களின் வீடுகள், கோயில்கள், பள்ளிகள் இடிக்கப்படும். இந்த படுபாதக செயலைத்தான் வளர்ச்சி என்கிறது மத்திய, மாநில அரசு என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : peasants ,Chittor ,Government ,land , 6th way of destroying , peasants, Chittor to Thachoor?
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை