×

அதிமுக கூட்டணி இழுபறிக்கு காரணம் என்ன? முக்கிய தொகுதிகள் கேட்டு மிரட்டும் பாஜ

சென்னை: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்து தமிழக அமைச்சர்களுடன் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் அதிமுக - பாஜ கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நிலையே உள்ளது. இழுபறிக்கு காரணம் என்ன என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒன்றிரண்டு நாளில் மீண்டும் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். விரைவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்துதான் போட்டியிடும், இந்த கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருவதாக முன்னணி தலைவர்கள் கூறி வந்தனர். அதன்படி, அதிமுக - பாஜ இடையேதான் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த கூட்டணிக்கு அதிமுக 2ம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், தமிழகத்தில் பாஜவுக்கு செல்வாக்கு இல்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால், நமது கூட்டணிக்கு வாக்கு கிடைக்காது. அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்புபவர்களும் பாஜவுடன் கூட்டணி அமைந்தால் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி வந்தனர். ஆனால், டெல்லியில் உள்ள பாஜ தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணிக்கான வேலைகளை முடுக்கி விட்டனர். இதனால், அதிமுக முன்னணி தலைவர்கள் கூட, பாஜவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற தகவலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய எரிசக்தி துறை அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் திடீரென கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். சென்னை, விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் தமிழிசை மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், சென்னை, ஆழ்வார்பேட்டையில் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில், அமைச்சர்களும், அதிமுக தேர்தல் பொறுப்பு குழுவில் இடம் பெற்றுள்ள தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் அங்கு வந்தனர். இவர்கள் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ இணைந்து போட்டியிடுவது என்றும், தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பேச்சு நடத்தினர். 3 மணி நேரம் பேசியும், உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது பாஜ மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு 17 இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், தொகுதி பங்கீட்டிலும் இழுபறி ஏற்பட்டதால் பேச்சுவார்த்தையை தொடர முடியாமல், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அன்றைய தினம் நள்ளிரவே டெல்லி திரும்பி விட்டார். அதிமுக - பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என்ன என்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி. அதன்படி, பாஜ, பாமக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதுவரை ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் கட்டமாக 3 நாட்களுக்கு முன் பாஜ தலைவர்கள் சென்னை வந்து, அதிமுக தலைவர்களுடன் பேசிவிட்டு சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டெல்லி பாஜ தலைவர்கள் அதிக சீட் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் அவர்களின் செல்வாக்கு என்ன என்பது அறிந்துதான் அவர்களுக்கு இடம் அளிக்க முடியும்.

குறிப்பாக அதிமுக வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை பாஜ தலைவர்கள் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். அதன்படி தென்சென்னை, பெரும்புதூர், கோவை, திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளை கேட்கிறார்கள். தென்சென்னையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் எம்பியாக உள்ளார். அந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமாரும் கட்சி மேலிடத்தில் கூறியுள்ளார். அப்படியிருக்கும்போது தென்சென்னையை எப்படி நாங்கள் விட்டுக்கொடுக்க முடியும். அதேபோன்று தஞ்சாவூர் தொகுதி, மூத்த தலைவர் வைத்திலிங்கம் ஆதரவாளரை நிறுத்தி தனது செல்வாக்கை காட்ட விரும்புகிறார். திருச்சியைப் பொறுத்தவரை ஜெயலலிதா பேரவையில் முக்கிய பதவி வகித்தவரும், தற்போது மாவட்டச் செயலாளராக உள்ளவருமான குமார் தற்போது எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
தற்போது அதிமுக எம்பியாக உள்ள பலர் மீண்டும் சீட் கேட்கிறார்கள். இப்படி அதிமுக முன்னணி தலைவர்கள் போட்டியிட நினைக்கும் அல்லது எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கேட்கிறார்கள். அதை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். பாஜவுக்கு கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழகத்தில்தான் கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அவர்கள் செல்வாக்கு உள்ள தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க முடியும். மேலும், அவர்கள் கேட்ட 17 தொகுதியும் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். ஆனால் மற்ற தொகுதிகளில் பிரச்னைகள் உள்ளன. இதனால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு நாளில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார். அதில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி விவரங்கள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , What is the reason ,defeat of the AIADMK,main blocks , intimidating the bjp
× RELATED ஈரோடு தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால்...