×

தரம், பாதுகாப்பு, பயணிகள் சேவையில் கோவை விமான நிலையம் 15-வது இடம் பிடித்தது: ஏர்போர்ட் கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தகவல்

கோவை: ஏர்போர்ட் கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் கோவை விமான நிலையம் 15-வது இடம் பிடித்தது. கோவையில் விமான சேவை கடந்த 1940-ம்  ஆண்டு துவக்கப்பட்டது. ஆனாலும், 1995-ல்தான் பன்னாட்டு விமான சேவை  துவங்கியது. 2012-ம் ஆண்டு இது சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்ந்தது.  தற்போது இங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும்  சுமார் 40 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் கோவை மட்டுமின்றி,  அருகில் உள்ள ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம் மாவட்டத்தினர் மற்றும்  கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட விமான பயணிகள், கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கோவை சர்வதேச விமான நிலையம் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது, இங்கு 9 ஆயிரம் அடி நீள ஓடுபாதை உள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில் இயக்கப்படும் பெரிய அளவிலான பயணிகள், சரக்கு விமானங்கள் வந்து செல்ல வேண்டுமானால் ஓடுபாதையின் நீளம் 12 ஆயிரம் அடியாக இருக்கவேண்டும்.

எனவே, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தி கொடுக்குமாறு மத்திய விமான போக்குவரத்து ஆணையம், தமிழக அரசுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது. இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னியம்பாளையம், இருகூர், நீலாம்பூர், நீலிக்கோணாம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 627.89 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மக்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கையகப்படுத்த திட்டமிட்டிருந்த சில பகுதிகள் நீக்கப்பட்டன. மேலும், நிலத்தின் சந்தை மதிப்பீல் 2 மடங்கும், உரிய பிற இழப்பீடும் வழங்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, இறுதியாக, பட்டா நிலம் 461 ஏக்கர், புறம்போக்கு நிலம் 28 ஏக்கர், சூலூர் விமானப்படை தளத்தின் நிலம் 134 ஏக்கர் ஆகியவற்றை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக கோவையிலும், சென்னையிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கையகப்படுத்தப்படும் இடங்கள் 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏராளமான நில உரிமையாளர்கள், தங்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்திக்கொடுக்க வேண்டும், மாற்று இடம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.  இது ஒருபுறம் இருக்க, ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் 2018ம் ஆண்டில் ஏர்போர்ட் தரம் மற்றும் சேவை பற்றி நாடு முழுவதும் 20 விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவை விமான நிலையத்தின் சர்வீஸ் தரம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. குறைவான விமான கட்டணம், ஏரோபிரிட்ஜ், கரன்சி எக்சேஞ்ச், செல்ப் செக்-இன், நவீன கேண்டீன், ஆன்லைன் செக்-இன், விரைவான பாதுகாப்பு சேவை, மாற்றுத்திறனாளிகளை எளிதாக கையாள்வது, பயணிகளை விரைவாக அழைத்துச்செல்லுதல், ஓய்வறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கோவை விமான நிலையத்தின் தரம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.  ஆய்வு செய்யப்பட்ட 20 விமான நிலையங்களில், கோவை விமான நிலையம் 15வது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர், விசாகப்பட்டணம், பாட்னா ஆகிய விமான நிலையங்களை ஒப்பிடும்போது, கோவை விமான நிலையத்தில், விமான கட்டணம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 5-க்கு 4.87 புள்ளிகள் பெற்று மங்களூர் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 4.86 புள்ளிகள் பெற்று லக்னோ விமான நிலையம் 2வது இடத்திலும், 4.86 புள்ளிகள் பெற்று திருவனந்தபுரம் விமான நிலையம் 3வது இடத்திலும் உள்ளது. 4.80 புள்ளிகள் பெற்று இந்தூர் விமான நிலையம் 4வது இடத்திலும், 4.79 புள்ளிகள் பெற்று கொல்கத்தா விமான நிலையம் 5வது இடத்திலும் உள்ளது. இப்புள்ளி பட்டியலில், தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. சென்னை விமான நிலையம் 4.65 புள்ளிகள் பெற்றுள்ளது. கோவை விமான நிலையம் 4.59 புள்ளிகள் பெற்றுள்ளது. கோவை விமான நிலையம் கடந்த 2017 ம் ஆண்டில் 4.29 புள்ளிகள் பெற்றது. கட்டமைப்பு வசதி மற்றும் பயணிகள் சேவையை அடிப்படையாக கொண்டு இந்த புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள்  கூறியதாவது: கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இதன் தரம் இன்னும் உயரும். அண்டை  நாடுகள், குறிப்பாக தெற்காசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு கோவையில்  இருந்து புதிய விமானங்கள் இயக்கப்படும். சரக்கு போக்குவரத்தும்  அதிகரிக்கும்.

இதனால் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி உயரும். தகவல்  தொழில்நுட்ப துறை மேம்படும். ‘டாலர் சிட்டி’ என  அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தின் ஏற்றுமதியும் பல மடங்கு உயரும். மோட்டார் வாகன  உதிரிபாகங்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், உணவுப்பொருட்கள், நகைகள் உள்ளிட்ட  பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு பெருகும். புதிய  தொழில் துவங்க முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக கோவை திகழும்.  கோவை மாவட்டத்தின் வளர்ச்சி அதிகரிப்பது மட்டுமின்றி, பன்னாட்டு  நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, கோவை பகுதி மக்களுக்கு கிடைக்கும். இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore Airport ,place ,passenger ,Air India , Quality, security, traveler, service
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...