×

உடுமலையில் தொடர்ந்து சின்னதம்பி யானை முகாம் : சின்னதம்பியை பிடிக்கும் பணி நாளை ஒத்திவைப்பு

கோவை : உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடுமலைப்பேட்டை கரும்பு காட்டுக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை ஹெலிகேம் உதவியுடன் தேடி வந்தனர். இதையடுத்து 8 மணி நேரங்களுக்கு பிறகு சின்னதம்பி யானை இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியே வந்தாலும் இன்று பிடிக்க வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது.

கண்ணாடிபுத்தூர் என்ற ஊரில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்தது. எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் கொடுக்காமல் இருந்து வந்தது. இதனிடையே சின்னதம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் கும்கியானை உதவியுடன் சின்னதம்பியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அந்த கும்கி யானையுடன், சின்னதம்பி யானை நண்பனாக பழகி விளையாடி வந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கண்ணாடிபுதூர் கரும்பு காட்டில் உள்ள சின்னத்தம்பியை சமதள பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை முதலே சின்னத்தம்பியின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் கரும்பு காட்டிற்குள்ளே இருந்து சின்னதம்பி வராததாலும், மாலை 6 மணிக்கு மேல் யானைக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்பதாலும் சின்னதம்பியை பிடிக்கும் பணியானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathambi Elephant Camp ,Udumalai , Udumalai, Chinnathambi Elephant, Forest Department, Kumki Elephant
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு