×

அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று, பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம், ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர கோரிக்கை விடுத்து பேசினார். இதற்கு பதிலளித்த கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் கால்நடைத்துறையில் 820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்துள்ளார். மேலும் நெய்வேலி தொகுதியில் தேவைக்கேற்ப கால்நடை கிளை நிலையங்கள் அமைத்துத் தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே விவாதத்தின் போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அரசு இ சேவை மையங்கள் செயல்பாட்டில் இல்லாத ஊராட்சிகளில் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வீட்டில் மரணம் அடைபவர்களுக்கு இறப்பு சான்றிதழ், இறுதிச் சடங்குகள் நடைமுறையில் சிக்கல் உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டில் மரணம் அடைபவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற எளிய நடைமுறைகளைக் கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,Udumalai Radhakrishnan ,Alanganallur , Alanganallur, Veterinary Hospital, Minister Udumalai Radhakrishnan
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...