×

மழையின்றி சரிந்தது பெரியாறு நீர்மட்டம் : காத்திருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம், திகிலில் தென்மாவட்ட மக்கள்

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் தென்மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது பெரியாறு அணை. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழை ஏமாற்றியதால், கடந்தாண்டு இறுதியில் அணை நீர்மட்டம் 128 அடியை தாண்டவில்லை. நீர்வரத்தும் குறைவாகவே இருந்தது. மேலும், பாசனம், குடிநீருக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், கடந்த இரு மாதங்களாக அணையின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வந்தது.

152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 115.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 1,889 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக இருந்தாலும், அணையின் கிடப்பு நீரான (டெட் ஸ்டோரேஜ்) 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே, தமிழக பயன்பாட்டிற்காக கொண்டு வர முடியும். அந்த வகையில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் வரை அணையில் இருந்து இனி 11 அடி தண்ணீர் மட்டுமே, தமிழகத்துக்கு எடுக்க முடியும். எனவே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தென்மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தென்மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 50.07 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 2,001 மில்லியன் கனஅடியாக உள்ளது.
 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் நேற்று 39.15 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. தண்ணீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்புநீர் 174.64 மில்லியன் கனஅடியாக உள்ளது. 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின்  நீர்மட்டம் நேற்று 88.88 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தும், நீர்வெளியேற்றமும் இல்லை.  அணையின் இருப்பு நீர் 47.97 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழை எங்கும் பதிவாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : waiter ,tsunami , Rain, dam, water
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...