×

தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் தொடர் அட்டகாசம் : வாழை, தக்காளி பயிர்கள் நாசம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, யானைகள் தொடர் அட்டகாசத்தால் வாழை, தக்காளி பயிர்கள் நாசமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானை கூட்டம் கடந்த 4 மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள், அருகே உள்ள கிராமங்களில் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதில் 70 யானைகளை வனத்துறையினரின் தீவிர முயற்சியால், ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது.

மேலும், 25க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானை கூட்டத்தை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், குட்டிகள் உள்ளதால் யானைகள் முரண்டு பிடித்து நொகனூர் காட்டிலேயே தஞ்சமடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அட்டகாசம் செய்யும் யானைகளை, ஜவளகிரி காட்டிற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானை கூட்டம் இரண்டு பிரிவாக பிரிந்து தாவரகரை, ஒசட்டி பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் தோட்டங்களை நாசம் செய்தன.

பின்னர் அங்கிருந்த மணியம்பாடி, பிக்கனப்பள்ளி பகுதியில் 15க்கும் மேற்பட்ட யானைகள் வாழை, தக்காளி தோட்டங்களை நாசம் செய்தன. தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் சேதமடைந்த வாழை, தக்காளி, பீன்ஸ் தோட்டங்களை பார்வையிட்டு உரிய நஷ்ட ஈடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக வசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடிவக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். தொடர் அட்டகாசத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அட்டகாசம் செய்யும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhenkanikottai, elephants, banana,tomato
× RELATED சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம்...