×

திசையன்விளை அருகே அவசர கதியில் தரமற்று அமைப்பு : அதிகாரிகளின் அலட்சியத்தால் 12 மணி நேரத்தில் பாழான தார் ரோடு

திசையன்விளை: திசையன்விளை அருகே அவசர கதியில் தரமற்று அமைக்கப்பட்ட தார் சாலை 12 மணி நேரத்தில் பாழானது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைகள் முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. மோசமான ரோடுகளால் தமிழகத்தில் உயிர்பலி அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரோடு பணிகளின் தரத்தை கண்காணிக்க அதிகாரிகள் முன்வருவதில்லை. நெல்லை மாவட்டம் திசையன்விளை  நாங்குநேரி மெயின்ரோட்டில் உள்ளது வாழைதோட்டம் கிராமம். இந்த பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தார்சாலையானது  முறையான பராமரிப்பின்றி பாழானது.

அதாவது மருந்துக்கூட பராமரிக்கப்படாததால் முற்றிலும் உருக்குலைந்து மண் சாலையாகவே மாறிபோனது. இதனால் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களின் தொடர்ந்து எழுப்பிய போர்க்குரலை அடுத்து சீரமைக்க முன்வந்த அரசு, கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக தார்சாலை அமைக்க அனுமதி அளித்ததோடு ரூ.35 லட்சமும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்தகாரர்கள் இரவு 9 மணிக்குள் அவசர அவசரமாக 4 கி.மீ. அளவுக்கு சாலையை போட்டு முடித்தனர். அதாவது ஏற்கனவே பராமரிப்பின்றி மாறிய மண்சாலை மீதே நேரடியாக பேபி ஜல்லி கற்கள் கொண்டு தார்சாலை அமைத்து சென்றனர்.

இவ்வாறு சாலை அமைக்கப்படும் போது அங்கு சென்ற கிராம மக்கள், இதுகுறித்து விவரம் கேட்டபோது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததார்கள் முறையாக விவரம் தெரிவிக்க மறுத்ததோடு அவமரியாதையாகப் பேசியதாகவும் தெரிகிறது. ஒரு வழியாக புதிய தார்சாலை அமைக்கும் பணி 7 மணி நேரத்தில் முடிந்ததால் முதலில் மகிழ்ச்சியடைந்த மக்கள், பின்னர் நேற்று காலை 9 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் ஆங்காங்கே தார் சரியாக பொருந்தாமல் திட்டு திட்டாக பெயர்ந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆவேசமைடந்த கிராம மக்கள், கிறிஸ்தவ ஆலயம் சென்று மணி அடித்து ஓசை எழுப்பினர். மேலும் ஆலய ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

இதையடுத்து அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்கு வரும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த ராதாபுரம் ஒன்றிய உதவிப் பொறியாளர் பிரவீன், திசையன்விளை எஸ்ஐ ராஜாமணி மற்றும் போலீசார் சமரச முயற்சி மேற்கொண்டனர். அப்போது அதிமுக ஊராட்சி செயலாளர் செல்லத்துரை, விவசாய சங்கத்தைச் சேர்ந்த அருள், பாஜ பிரமுகர் சேர்மத்துரை, அலெக்சாண்டர், மைக்கேல், திலகர், ஜோசப், ரீகன், சகாயம், மரியஞானம் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர். உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? இப்படியா மோசமான ரோட்டை போடுவதைவிட போடாமலேயே இருந்திருக்கலாமே? என கொதித்தெழுந்தனர்.

அவர்களை உதவிப் பொறியாளர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை ஏற்க மறுத்த மக்கள் அரைகுறையாகவும், தரம்குறைவாகவும் அமைக்கப்பட்ட இந்த சாலையை அகற்றிவிட்டு முற்றிலும் புதிதாகவும் தரமாகவும் சாலை அமைத்து தரும் வரையில் போராட்டம் தொடரும் என்றனர். இதை ஏற்றுக்கொள்வதாக உதவிப்பொறியாளர் பிரவீன் வாய்மொழியாக உறுதியளித்தார். அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : organization ,devotee ,Vasanayanvai , Thisayanvilai, tar road, people
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...