வீடுகட்டி தருவதாக ஏமாற்றியதாக புகார்: நடிகை மஞ்சு வாரியர் வீட்டு முன் ஆதிவாசி மக்கள் போராட்ட அறிவிப்பு...அமைச்சர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஆதிவாசி சமூகத்தினருக்கு வீடு கட்டி கொடுப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் ஏமாற்றியதாக கூறி பிரபல நடிகை மஞ்சு  வாரியர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நல  உதவிகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் வயநாடு அருகேயுள்ள கல்பெட்டா பரக்குனி ஆதிவாசி காலனியில் 57 குடும்பத்தினருக்கு ₹1.85 கோடி  செலவில் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறியிருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு சென்றபோது அவர் பல வசதிகளை செய்து தருவதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் கூறியபடி  வீடுகளை கட்டிக்கொடுக்கவில்லை என புகார் எழுந்தது. மஞ்சு வாரியர் வீடு கட்டி தருவதாக உறுதியளித்திருந்ததால் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம்  கிடைக்க வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் முடங்கி விட்டதாக கூறி திருச்சூரில் உள்ள நடிகை மஞ்சு வாரியர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக  பரக்குனி காலனிவாசிகள் அறிவித்தனர்.  இதுகுறித்து அறிந்ததும் நடிகை மஞ்சு வாரியர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனை சந்தித்து பேசினார். போராட்டக்காரர்களிடம் தான்  பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதன் பின்னர் மஞ்சு வாரியர் கூறுகையில், பரக்குனி ஆதிவாசி குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டுவது  உட்பட சில அடிப்படை வசதிகளை செய்ய ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் தனிப்பட்ட ஒருவரால், அவர்கள் கேட்டுக்கொண்டபடி திட்டங்களை  நிறைவேற்ற முடியாது என தெரியவந்தது. இது தொடர்பாக அரசிடமும் அப்போதே தெரிவித்து விட்டேன். தனிப்பட்ட எந்த அமைப்பாலோ, நிறுவனத்தாலோ  அப்படியொரு திட்டத்தை நிறைவேற்ற சில சட்டங்கள் அனுமதிக்காது. அப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றுவதாக கூறியதால் அரசு திட்டங்கள்  கைவிடப்பட்டதாக கூறப்படுவது தவறாகும் என்றார். இதற்கிடையே கேரள பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் பரக்குனி ஆதிவாசி மக்களைஅழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு  ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: