×

உத்திரமேரூரில் 1,100 ஆண்டு பழமையான சிலைகள் புதைந்துள்ள இடத்தை அகழாய்வு செய்ய வேண்டும்: தொல்லியல் துறைக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: உத்திரமேரூரில் 1,100 ஆண்டு பழமையான சிலைகள், தூண்கள் புதைந்துள்ள இடத்தை அகழாய்வு செய்ய வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் பட்டஞ்சேரி அருகே பித்திளிகுளம் உள்ளது. இதன் அருகே உள்ள முட்புதரில் பழங்கால கற்சிலைகள் மற்றும் சில கல் தூண்களும் காணப்படுகின்றன. சோழர் காலத்தை சேர்ந்த சிலைகள் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இதில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை, ஜேஷ்டா தேவி சிலைகளும் இருக்கிறது. வரலாற்று பொக்கிஷங்களான இந்த சிலைகள், கல் தூண்கள் கேட்பாரற்று மண்ணில் புதைந்து காணப்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள ஜேஷ்டா தேவி சிலைக்கு, தவ்வை மூத்தோள் உள்பட 14 பெயர்கள் உள்ளன. தவ்வை அம்மன் காலங்காலமாக வழிபாட்டில் இருந்துள்ளது. இங்கு காணப்படும் தவ்வையின் முழு உருவச்சிலையில் தலைப்பகுதி மட்டுமே தற்போது உள்ளது. எஞ்சியவை சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதன் அருகே 3 முகங்கள், 4 கரங்களுடன் பிரம்மா சிலையும், விஷ்ணு, துர்கை சிலையில் தலைப்பகுதியும், 2 கைகள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. மற்ற 2 கைகள், உடல்பகுதி முழுவதும் மண்ணில் புதைந்துள்ளது. இப்பகுதியில், ஒரு பெரிய கோயில் இருப்பற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த பகுதியை அகழாய்வு செய்தால், மேலும் பல சிலைகளும், முக்கிய வரலாற்று பொக்கிஷங்களும் கிடைக்க வாய்ப்புள்ளன. 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தச் சிலைகள், வரலாற்று சிறப்பு மிக்க கலைப் பொக்கிஷங்கள். இவை அழியும் நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன. தொல்லியல்துறையும், வருவாய்த்துறையும் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 1,100 year old, burial ground,Emphasis
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...