×

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி : கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை பல்கலை., உதவிபேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உதவிபேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் பலமுறை ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தும், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தங்களுக்கும், பேராசிரியர் நிர்மலா தேவிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றும், எங்கள் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணைக்கு அழைக்கும்பட்சத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளனர். முன்னதாக சிபிசிஐடி தன்னுடைய வாக்குமூலம் என நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தன்னை மிரட்டி வாங்கப்பட்ட பொய்யான வாக்குமூலம் என்றும், தனக்கு ஜாமீன் வழங்க மறுப்பதில் உள்நோக்கம் உள்ளது எனவும் நிர்மலா தேவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிர்மலா தேவியும் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் உரிய ஆதாரங்கள் சமர்பிக்காவிடில் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murugan ,Kallapasamy ,Supreme Court , College students, Murugan, Karuppasami, Nirmala Devi, Supreme Court
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...