×

பிச்சை எடுக்கும் நிலையில் மாநிலங்கள் பாஜவை கடுமையாக விமர்சித்த தம்பிதுரை: அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜ அரசை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்ததை எதிர்த்து பாஜ எம்.பி.க்களும், கர்நாடகா குதிரை  பேரம் விவகாரம் தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்று நாள் முழுவதும்  முடங்கியது. மக்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது: மத்திய அரசின் இடைக்கால  பட்ஜெட், தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது. தற்போது விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 உதவித் தொகையை மத்திய அரசு ஏன் 2018ம் ஆண்டு  அறிவிக்கவில்லை? மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜ அரசு தீவிரமாக உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது.

மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? பாஜ அரசின் அனைத்து திட்டங்களும்  தோல்வியடைந்து விட்டன. கொடுத்த வாக்குறுதி எதனையும் பாஜ நிறைவேற்றவில்லை. இவ்வாறு தம்பிதுரை கடுமையாக விமர்சித்தார். இதனால் கொந்தளித்த  பாஜ எம்.பி.க்கள் தம்பிதுரை பேச்சை நிறுத்த வேண்டும் என்று முழக்கமிட்டவாறு அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா  தளம் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜ குதிரை பேரம் நடத்தி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மஜத கட்சி எம்.எல்.ஏ.வை கட்சி  மாற வைக்க கர்நாடக பாஜ தலைவர் பி.எஸ்.எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ விவகாரம் மக்களவையில் எழுப்பப்பட்டது.

 “ஆபரேஷன் தாமரை” திட்டத்தை பாஜ கைவிட வேண்டும் என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவகவுடா  வலியுறுத்தினார். அப்போது பேசிய, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டுத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, “இங்கு கூறப்பட்ட அனைத்தும் பொய்.  உண்மைக்கு புறம்பானவை” என்று கூறினார். இதனிடையே ‘ஆபரேஷன் தாமரை, ஜனநாயக படுகொலை’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி  மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் அமைதியாக இருக்கும்படி  சபாநாயகர் பலமுறை கூறியும் கலைந்து செல்லாததால், அவை 50 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி  இடைக்கால பட்ஜெட் குறித்த தனது உரையை முடித்தவுடன், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ‘நீதி வேண்டும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்’ என  எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவை 30 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், கர்நாடாக குதிரை பேரத்தில்  பிரதமர் மோடிக்கும் பாஜ தலைவர் அமித்ஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரித்ததை அடுத்து அவை  நாள் முழுவதும் ஒத்தி வைக்கபட்டது. இதேபோன்று, மாநிலங்களவையிலும் கர்நாடகா குதிரை பேரம், ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி காங்கிரஸ்,  தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான  திருமணப்பதிவு சட்டம் 2019 மசோதாவை தாக்கல் செய்தார். பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூயல் ஓரம், பழங்குடியினர் அரசியலமைப்பு 3வது திருத்த  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதன் பின்னரும் அமளி நீடித்ததால், அவையை நாள் முழு வதும் ஒத்திவைத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு  உத்தரவிட்டார்.

பிரதமர்தான் முதல் குற்றவாளி: மக்களவையில் நேற்று நடந்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி,  ‘‘லோக்பால் ஏன் அமைக்கப்படவில்லை என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. லோக்பால் அமைக்கப்பட்டிருந்தால், பிரதமர்தான் முதல் குற்றவாளியாக  இருந்திருப்பார். ஊழல் தோட்டா தாக்கும்போது, பிரதமரின் 56 இன்ச் மார்பு அதை தாங்க முடியாது’’ என்றார். இதற்கிடையே மக் களவையில் நேற்று  எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே இடை க்கால பட்ஜெட் டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP , Begging, states, BJP, brotherhood, embarrassment, parliament
× RELATED வாடகை தராததால் நிறுவனத்தின் பொருட்களை விற்ற பா.ஜ.க. நிர்வாகி கைது