×

உடுமலை அருகே அட்டகாசம் செய்யும் சின்னதம்பி யானையை விரட்ட மேலும் ஒரு கும்கி வரவழைப்பு

உடுமலை: உடுமலை அருகே அட்டகாசம் செய்து வரும் சின்னதம்பி யானையை விரட்ட மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கோவையில் பிடிபட்ட சின்னதம்பி யானையை வனத்துறையினர் டாப்சிலிப் வனத்தில் ெகாண்டு சென்று விட்டனர். ஆனால் அந்த யானை அங்கிருந்து உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்துக்கு வந்து அங்குள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது. சுமார் 6 நாட்களாக முகாமிட்டிருந்த யானையால் ஆலை பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சின்னதம்பி யானை கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெளியேறி செங்கழனிபுதூர், மடத்துகுளம், கண்ணாடிபுதூர் கிராம பகுதிகளுக்குள் நுழைந்தது. அங்குள்ள கரும்புக்காடு, வயல் வெளிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இது விவசாயிகளை அச்சப்படுத்தியது.

சின்னதம்பி யானையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மாரியப்பன், கலீம் ஆகிய 2 கும்கிகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டன. ஆனால், அந்த இரண்டு கும்கிகளால் சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில் சின்னதம்பி யானை கண்ணாடிபுதூரில் இருந்து வெளியேறி நீலம்பூர் என்ற கிராம பகுதியில் உள்ள கரும்புக்காட்டுக்குள் பதுங்கியது. சின்னதம்பியை விரட்ட வரவழைக்கப்பட்டிருந்த மாரியப்பனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, சின்னதம்பியை விரட்ட சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. சுயம்பு மற்றும் கலீம் என்ற இரண்டு கும்கி யானைகளுடன் சின்னதம்பியை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குவியும் கூட்டம்: கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை பார்க்க நேற்று ஏராளமான மக்கள் நீலம்பூரில் குவிந்தனர். இதனால் அந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள தோட்ட பகுதிகளில்  ஐஸ்கிரீம், கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் தற்காலிக கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udumalai , Udumalai, Chirathambi Elephant, Kumki
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்