×

உடுமலை அருகே கரும்புக்காட்டில் சின்னதம்பியை கண்டு கும்கிகள் ஓட்டம்

உடுமலை: உடுமலை அருகே கரும்புக்காட்டில் சின்னதம்பி ஓடுவதை பார்த்து 2 கும்கிகளும் தலைதெறிக்க ஓடின. இதனால் பாகன்களும், பொதுமக்களும் பீதி அடைந்தனர்.
கோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை, கடந்த 9 நாளாக உடுமலை பகுதியில் சுற்றி வருகிறது. நேற்று காலை கிருஷ்ணாபுரத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள கண்ணாடிபுத்தூர் வடக்கு பகுதியில் உள்ள கரும்பு காட்டில் சின்னதம்பி புகுந்தது. இதை விரட்ட கும்கிகள் கலீம், மாரியப்பனை பாகன்கள் அழைத்து சென்றனர்.

வழியில் கண்ணாடிபுத்தூரில் உள்ள அமராவதி வாய்க்காலில் கும்கிகளை இறக்கி பாகன்கள் குளிப்பாட்டினர். பின்னர் கரும்புக்காட்டுக்குள் கும்கிகள் சென்றன. கும்கிகள் வருவதைப் பார்த்து சின்னதம்பி  வடக்கு திசை நோக்கி ஓடியது. இதைக்கண்ட கும்கிகள் எதிர்த்திசையில் வயல்காட்டில் ஓடத்துவங்கின. 2 கும்கிகளும் மணியோசை எழுப்பியபடி தலைதெறிக்க ஓடுவதை பார்த்த பொதுமக்கள், கும்கிகளுக்கு மதம் பிடித்துவிட்டதாக நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கும்கிகளின் மேல் இருந்த 2 பாகன்களும் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. கீழே நடந்து வந்த 2 பாகன்களும் கும்கிகள் பின்னாலேயே ஓடினர். சிறிது நேரத்தில் கலீம், பாகன்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் மாரியப்பன், பாகனை சுமந்தபடி வெகுதூரம் ஓடியது. சுமார் 1 மணி நேரம் வரை தனது இருப்பிடத்துக்கு வரவில்லை.

‘நெற்பயிரை சேதப்படுத்தாதே விநாயகா’
செங்கழனிபுதூர் என்ற இடத்தில் உள்ள தோட்டங்களில் சின்னதம்பி உலா வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் சின்னதம்பி யானையை நோக்கி கும்பிட்டு மன்றாடியபடி தரையில் விழுந்தார். ``விநாயகா... நெற்பயிர்களை ஒன்றும் செய்துவிடாதே. அதுதான் எனது குடும்பத்தை காப்பாற்றுகிறது’’ என்று கண்ணீருடன் கூறி மன்றாடினார்.
இதை அங்கு நின்ற வனத்துறையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பின்னர் அந்த விவசாயியை வனத்துறையினர் தூக்கி அவருக்கு ஆறுதல் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shore ,Uthumalai , Chinnathambi Elephant, Kumki
× RELATED ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு...