×

வசூலில் படு கில்லி...

கோவை மாநகர காவல்துறையில் 15 ரெகுலர் காவல்நிலையங்கள் உள்ளன. இதில், ஒரு காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர், வசூலில் படு கில்லி. கோ… என்ற ெபயரில் துவங்கும்  இவர், வசூலில் கோ…லோச்சி வருகிறார். ஸ்டேஷனுக்கு யாராவது புகார் மனு கொண்டு வந்தால் போதும், அவரே நேரில் உட்கார்ந்து விசாரிக்க ஆரம்பிப்பாரு... எஸ்.ஐ., ஏட்டு என யாரையும்  உள்ளே அனுமதிக்க மாட்டாரு... விசாரிக்கும்போது, எதிர்தரப்பு பார்ட்டியையும் வரவழைப்பார்... அவர், வலுவாக கவனித்து விட்டால், புகார்தாரரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்... ஒரு வாரம் கழித்து  மீண்டும் வாப்பா... அப்புறம் விசாரிப்போம்... என தட்டிவிடுவார்... ஒரு வாரம் கழித்து புகார் மனுதாரர் வந்தால், இன்னும் ஒரு வாரம் கழித்து வாப்பா... என இழுத்தடிப்பார். இப்படியே ஜவ்வாக  இழுத்து, புகார்தாரரை கிறங்கடித்து விடுவார். எதிர்தரப்பு பார்ட்டி கவனிக்கும் தொகைக்கு ஏற்ப, இந்த இழுத்தடிப்பு தொடரும். சில புகார்தாரர்கள் பொறுமை இழந்து, மாநகர போலீஸ் கமிஷனர்,  துணை கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தால், அதையும் சமாளித்து விடுகிறார். ‘‘ஐயா பார்த்துக்கிறேன்... விசாரிச்சிக்கிட்டு இருக்கேன்... நடவடிக்கை எடுக்கிறேன்...’’ என சரண்டர் ஆகி,  மேலதிகாரிகள் பிடியில் இருந்தும் நழுவி விடுகிறார். பிரச்னை எதுவாக இருந்தாலும் சரி, நமக்கு கலெக்க்ஷன் வருதா பாரு... என்பதே இவரது பாலிசி.

பிரிவு உபசார விழாவில் வசூல்வேட்டை
திருச்சியின் மத்திய பகுதியில் போக்குவரத்து ஆர்ஐயாக இருந்தவர் சமீபத்தில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இவர் பதவி உயர்வு பெற்று வேறு மாவட்டத்திற்கு செல்லும் முன்  அவருக்குட்பட்ட ரேஞ்சில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த முடிவு செய்தனர்.இதனை பொறுப்பேற்ற சிறப்பு எஸ்ஐ ஒருவருக்கு பணம் பண்ணும் ஐடியா வந்தது. அதன்படி, அந்த ரேஞ்சில் இருந்த 45 போக்குவரத்து போலீசாரும் தலா ₹200 கண்டிப்பாக கொடுக்க வேண்டும்  என வாய்மொழி உத்தரவிட்டார். மாற்றலாகும் ஆர்ஐயை அந்த ரேஞ்சில் உள்ள 75 சதவீதம் போலீசாருக்கு பிடிக்காது. ஏனெனில் வசை பாடுவது, ஒரு சாராருக்கு மட்டும் பணியில் சலுகை  காட்டுவது என இருந்ததால் ஆர்ஐயை வெறுத்தனர்.இந்நிலையில் சிறப்பு எஸ்ஐயின் அதட்டல் மிரட்டலால் பிடிக்காத போக்குவரத்து போலீசாரும் தலையெழுத்து என நொந்தவாறு பணம் கொடுத்தனர். பணி மாறுதலாகி செல்லும் போக்குவரத்து  ஆர்ஐ, அவரது காவல்துறை வாகத்தில் இருந்து கீழே இறங்க மாட்டார். சர்வகாலமும் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருப்பது முதல் வேலை. இதனை கண்ட கமிஷனர் ஏற்கனவே  ஆர்ஐக்கு டோஸ் விட்டது தனிக்கதை.

லாரியை மறித்தால் ஒரு மூட்டை தக்காளி
போலீஸ் செக்போஸ்ட்கள் என்றால் வாகன ஓட்டிகளிடம் வழக்கமாக போலீசார் மாமூல்தான் வாங்குவர். இது வாகனத்துக்கு தக்கபடி ₹100 முதல் ₹1000த்தை தாண்டும். அதனால் வாகன  ஓட்டிகளும் அப்போதைக்கு தங்களுக்கு பிரச்னையின்றி பார்த்துக் கொள்ள பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவர். ஆனால், ராணிப்பேட்டை சிப்காட் சீக்கராஜபுரம் போலீஸ் செக் போஸ்ட்டில்  இதற்கு நேர்மாறாக போலீசார் நடந்து கொள்கிறார்களாம்.ஏனெனில் இந்த சாலை சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையும், சென்னை-பெங்களூரு பழைய தேசிய நெடுஞ்சாலையும் என உள்ளது. இதனால் சென்னை மாநகருக்கு தக்காளி, காளிபிளவர்,  உருளைக்கிழங்கு, பீன்ஸ் என்று அனைத்து காய்கறிகளும், ரோஜா, சம்பங்கி என்று பல்வேறு வகை பூக்களும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து இந்த சாலை வழியாகவே லாரிகளில்  அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல் சென்னையில் இருந்து ஆயத்த உணவு வகைகள், மருந்து பொருட்கள், இரும்பு தளவாடங்கள், தானிய வகைகள் உட்பட பலவும் மேற்கண்ட  மாநிலங்களுக்கு மட்டுமின்றி வடமாநிலங்களுக்கும் இந்த சாலை வழியாகவே லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிகாலை 2 மணி முதல் 4 அல்லது 5 மணி வரை சிப்காட்  சீக்கராஜபுரம் போலீஸ் செக்போஸ்ட்டை கடந்து சென்னை நோக்கி காய்கறி, பூக்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை மட்டும் குறி வைத்து போலீசார் மறிக்கின்றனர். அப்போது இவர்களுடன்  ஊர்க்காவல் படை, போலீஸ் நண்பர்கள் குழுவும் உடன் இருக்கிறார்களாம். லாரிகளை மறித்தவுடன், அவர்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு லாரி கிளீனர் தக்காளி என்றால் ஒரு மூட்டையை  எடுத்து கொடுத்து விடுவாராம். அதில் ஏறக்குறைய 20 முதல் 30 கிலோ தக்காளி வரை இருக்குமாம். அதேபோல் மற்ற காய்கறிகளையும் போலீசாரிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்களாம்.  இதை அங்கு பணியில் இருக்கும் அனைவரும் பிரித்து எடுத்து சென்று விடுவார்களாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gilli , Gilli ...
× RELATED மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின்...