×

44 மாதங்களாக அலைக்கழிப்பு .... ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் ஓய்வுபெற்ற குத்துசண்டை வீரர்

சென்னை: நலிந்த வயதான விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கடந்த 44 மாதங்களாக கிடைக்காமல் 69 வயது குத்துசண்டை வீரர் போராடி வருகிறார்.  தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்தவர் பொன்னுவேல் சாமி (69). 1977ம் ஆண்டு தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட இவருக்கு தமிழக அரசின் நலிந்த வயதான விளையாட்டு வீரரருக்கான ஓய்வூதியம் கடந்த 44 மாதங்களாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:  எனக்கு 69 வயதாகிறது. 1977ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டேன். இதையடுத்து, 1985ம் ஆண்டு ராஜபாளையத்தில் நடந்த மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டியில் 3வது இடத்தையும் பெற்றேன். முன்னாள் விளையாட்டு வீரரான எனக்கு ஓய்வூதிய பணம் முறையாக கிடைக்க வில்லை.

2013ம் ஆண்டு 110 கோடிக்கு மேல் விளையாட்டு ஆணையத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் தகுதி விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளார்கள். 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் 7 மாத நிலுவை ஓய்வூதியம் எனக்கு கொடுக்கப்பட்டது.ஆனால், அதற்கு பிறகு எனக்கு வழங்க வேண்டிய 44 மாதங்களுக்கான ஓய்வூதியம் இதுவரையில் வரவில்லை. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த பதிலும் வரவில்லை. வறுமையில் சிக்கி தவிக்கும் நான் ஒவ்வொரு மாதமும் தலைமை செயலகத்திற்கு நடந்த வண்ணம் இருக்கிறேன். அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ பார்க்க முடியவில்லை. எனக்கு 44 மாத நிலுவை ஓய்வூதியம் வந்தாலே போதும். வயதான எனக்கு இதுதவிர வேறு எந்த வருமானமும் இல்லை. தமிழ்நாட்டிற்காக விளையாடிய விளையாட்டு வீரர்களுக்கு 6 வருடமாகியும் இதுவரையில் ஓய்வூதியம் உயர்த்தவில்லை. வரவேண்டிய ஓய்வூதியமும் முறையாக வரவில்லை. தமிழக அரசு ஓய்வூதியத்தை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Boxer, pension, gripping
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...