×

பொன்னமராவதி அருகே கண்மாயில் கிடந்த நடுகல் வீரர்கள் சிற்பம் கண்டெடுப்பு

பாபநாசம்: பொன்னமராவதி அருகே கண்மாயில் இருநடுகல் வீரர்கள் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சியில் தொல்லியல் வல்லுநர் குடவாயிற் சுந்தரவேலு கள ஆராய்ச்சி மேற் கொண்டார். அப்போது பெரிய கண்மாய்க்குள் இருநடுகல் வீரர்கள் சிற்பம் இருப்பதை கண்டறிந்தார். செவ்வக வடிவில் உள்ள பாறை கற்களில் அகழ்வு முறை வேலைப்பாட்டில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரர்களின் தலைமேல் உயரமான உருண்டை கொண்டை அடியில் நாடாக்கட்டுடன் இருக்கிறது. செவ்வக வடிவில் முகம் உள்ளது. வலப்புற தோளுக்கு பின்புலத்தில் அம்பறாத்தூணி (அம்புப்புட்டி) ஒரு பெரிய அம்பு போல் காட்டப்பட்டுள்ளது.

இந்த சிற்பங்கள் ஆபரணங்கள் அற்ற வெற்று உடலாக தோற்றமளிக்கிறது. இரண்டிலும் இடது கையில் வில் ஏந்தி, வலது கரத்தை இடுப்பு அருகில் கணையை பற்றியுள்ள பாவனையில் வைத்துள்ளனர். ஒரு வீரன் இடப்புறம் நோக்கி நடைபயிலும் நிலையிலும், மற்றொரு வீரன் கால்களை நேராக வைத்து நிற்கும் நிலையிலும் பாறையினுள் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்த இவ்விரு வீரர்களும் அந்நாளில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டலில் மாண்டுள்ளனர். ஊருக்காக இன்னுயிர் ஈந்தோர் என்றும் நினைவு கூறும் முகத்தான், கல்லிலே வடிக்க செய்து தம் நன்றி கடனை செலுத்தி உள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலைச்சரிவினில் புதைக்கப்பட்டிருந்த 1,500 ஆண்டுகளுக்கும் மேலான சங்ககால முதுமக்கள் தாழிகளும் உடைந்த நிலையில் உள்ளது தெரியவந்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnaravarai , Ponnamaravathi, tombstone, sculpture
× RELATED பொன்னமராவதி அருகே ஏனமாரியம்மன் கோயிலில் பால்குட விழா