×

முதல் டி20ல் இன்று இந்தியா - நியூசி. பலப்பரீட்சை

வெலிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, வெலிங்டன் வெஸ்ட் பேக் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று புதிய வரலாறு படைத்தது. நியூசி. மண்ணில் விளையாடிய இருதரப்பு தொடரில் இந்திய அணி 4 வெற்றிகளைப் பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இந்த தொடரிலும் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி வெற்றியை தொடரும் முனைப்புடன் உள்ளது. நியூசிலாந்தில் இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை என்ற சோக வரலாற்றை, நல்ல பார்மில் உள்ள இந்திய அணி இம்முறை மாற்றி எழுதும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு விளையாடிய டி20 தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ரோகித், தவான் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டோனி விக்கெட் கீப்பர் பொறுப்பை கவனித்துக் கொள்வார் என்பதால், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் பேட்ஸ்மேன்களாக இடம் பெறுவர். பன்ட் தனது அதிரடியை வெளிப்படுத்தினால் உலக கோப்பைக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இளம் வீரர் ஷுப்மான் கில் ஒருநாள் தொடரில் கணிசமாக ரன் குவிக்கத் தவறிய நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. அணியில் தற்போது கோஹ்லி, ராகுல் இல்லாததால், 3வது வீரராக கில் சேர்க்கப்படலாம். இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், டி20 தொடரிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், ஒருநாள் போட்டித் தொடரில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் நியூசிலாந்தும் வரிந்துகட்டுகிறது.

காயம் காரணமாக மார்டின் கப்தில் விலகிய நிலையில், ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளது நியூசி. அணிக்கு புதிய தெம்பு அளித்துள்ளது. பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவுதான். ஒருநாள் தொடரில் கணிசமாக ரன் குவிக்கத் தவறியதால், கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அறிமுக வீரர்கள் டாரில் மிட்செல் (ஆல் ரவுண்டர்), பிளேர் டிக்னர் (வேகப் பந்துவீச்சாளர்) நியூசிலாந்தின் துருப்புச்சீட்டாக இருப்பார்கள். இரு அணிகளுமே டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது, ஷுப்மான் கில், விஜய் ஷங்கர், முகமது சிராஜ்.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டக் பிரேஸ்வெல், டி கிராண்ட்ஹோம், லோக்கி பெர்குசன், ஸ்காட் குகலெஜின், கோலின் மன்றோ, டாரில் மிட்செல், டிம் செய்பெர்ட், சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர், ஜேம்ஸ் நீஷம்.

* இந்தியா கடைசியாக விளையாடி உள்ள 5 டி20 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. நியூசிலாந்து 4 தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.
* வெஸ்ட்பேக் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கடைசியாக நடந்த டி20ல் நியூசிலாந்து 196 ரன் குவித்த நிலையில், எதிர்த்து போட்டியிட்ட இங்கிலாந்து 184 ரன் எடுத்து தோற்றது.
* நியூசி. மண்ணில் இந்திய அணி டி20 போட்டியில் வென்றதில்லை என்றாலும், கடைசியாக விளையாடிய 10 இருதரப்பு டி20 தொடர்களிலும் தோற்றதில்லை என்ற புள்ளிவிவரம் இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளது.
* ரோகித் தலைமையில் விளையாடி உள்ள 12 டி20 போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T20 ,India ,Showdown ,Newcastle , First T20, India, New Zealand
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...