×

கொல்கத்தா சிபிஐ விவகாரம் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்

புதுடெல்லி: மேற்கு  வங்கத்தில் மாநில அரசு - சிபிஐ இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்  அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும்  ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் நேற்று காலை கூடியதும் இவ்விவகாரத்தை மையப்படுத்தி மக்களவையில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.  மத்திய அரசு  அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி, சபாநாயகர் சுமித்ரா  மகாஜனின் இருக்கையை முற்றுகையிட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ்,   சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி.க்களும்  அமளியில்  ஈடுபட்டனர்.

 அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தற்போது ஜனாதிபதி உரை மீதான  நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால், அது   முடிவடைந்ததும் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து விவாதிக்கலாம் என்று  கூறினார். அப்போது  மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,  பிஜூ ஜனதா தளம் தலைவர் மகதாப் ஆகியோரும் சிபிஐ விவகாரம் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர்.குறுக்கிட்டு பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்  சிங், “முன்னெப்போதும் இல்லாத வகையில் சிபிஐ விசாரணை அதிகாரிகள் மீது அத்துமீறில் நடந்துள்ளது. இது  மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள  அச்சுறுத்தலை போன்றது. கொல்கத்தாவில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய  உள்துறை அமைச்சகம் தொடர்ந்து  கண்காணித்து வருகிறது. அங்குள்ள சிபிஐ  அலுவலகங்களுக்கு மத்திய படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் கேசரிநாத்  திரிபாதியை தொலைப்பேசி மூலம் தொடர்புக்  கொண்டு மாநில நிலவரம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள்  போலீசாரால்  தடுக்கப்பட்டது, தாக்கப்பட்டது, கைது செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது. மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்  மத்திய அரசுக்கு  உள்ளது” எனத் தெரிவித்தார்.  இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்  அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பல முறை  ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை: இதே  விவகாரத்தை முன்வைத்து மாநிலங்களவையிலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்  கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது  பேசிய மாநிலங்களவைத் தலைவர்  வெங்கையா நாயுடு, ‘‘தற்போது ஜனாதிபதி உரையின் மீதான நன்றி தெரிவிக்கும்  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.  அதன் பின்னர் மற்ற விவகாரத்தை பற்றி பேசுங்கள்’’ என்று அறிவுறுத்தினார்.

கேள்வி நேரத்தின்போது, மாநிலங்களவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ  பிரையன் பேச அவர் அனுமதி வழங்கினார். ஒவ்வொருவருக்கும்  பேசுவதற்கு அனுமதி  அளிக்கப்படும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறினார். ஆனால் இதற்கு  ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சிபிஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் முதலில்  மதியம் 12 மணி  வரையிலும் பின்னர் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட அவை பின்னர்  நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : affair ,Calcutta CPI ,Parliament , Kolkata, CBI, Assembly and Parliament
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...