×

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு கோரி 8-வது நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே  ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி கூடங்களில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்தது. தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், உரிமையாளர்கள் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியப்போக்குடன் இருப்பதே தற்போதைய போராட்டத்திற்கு காரணம் ஆகும். எனவே தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் இவ்விகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேணடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்கள்    கோரிக்கை விடுத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
முன்பு போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், ஒப்பந்த காலத்தில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்ட போராட்டமாக சாலைமறியலில் ஈடுபட போவதாக விசைத்தறி தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wage rises, loom workers, struggle
× RELATED வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை