×

மணல் திருட்டு வாகனங்களை திரும்பப்பெற மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மணல் திருட்டு வாகனங்களை திரும்பப்பெற சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்வரை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த எம்.சக்கரவரத்தி. இவரது டிப்பர் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பர் மாதம் பூந்தமல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லாரியை விடுவிக்கக்கோரி சக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட வருவாய் வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தனது லாரியை விடுவிக்குமாறு உத்தரவிடக்கோரி சக்கரவர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.பி.மோட்சம் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்போது வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை திரும்பப்பெற சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும். அதன்பிறகு சிறப்பு நீதிமன்றங்களை அணுகி வாகனங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று லோகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு மாற்றப்பட்டு சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் மனுதாரர் சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி தனது வாகனத்தை திரும்பப்பெறலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Court ,magistrates , sand theft, Court
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...