×

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

சென்னை: முதல்வர் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்ட நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது அதிகாரிகள் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கும் இடையே உள்ள உறவை சுமுகமாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஜாக்ேடா-ஜியோ அமைப்பில் உள்ள 20 ஒருங்கிணைப்பாளர்களும் கூட்டாக, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:பல்வேறு கோரிக்கை இருந்தாலும் அவற்றை சுருக்கித்தான் மனுவாக அரசுக்கு ெகாடுத்திருந்தோம். அதன்படி 9 அம்ச கோரிக்கை மீது போராட்டம் நடத்தினோம். முதல்வர் அழைத்து பேசுவார் என்று நம்பினோம். வேண்டுகோளும் வைத்தோம். இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றும் எதிர்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் மாணவர்கள், மக்கள் நலன் கருதி வேலை நிறுத்தப் போராட்டத்தை 30ம் தேதியுடன் முடித்துக் கொண்டு அன்று முதல் பணிக்கு திரும்ப முடிவு எடுத்தோம். அப்படி பணியில் சேர சென்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் அதிகாரிகளின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வரின் வேண்டுகோளைக்கூட நிறைவேற்ற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 பணிக்குச் சென்ற ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றிய பள்ளியில் சேர அனுமதிக்காமல், வேறு பள்ளிக்கு மாறுதல் என்று சொல்லி பணியில் சேர அனுமதிக்காத நிலை உள்ளது.
 புனையப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர்க்க மறுக்கின்றனர்.
 தற்காலிக பணி நீக்கம் என்று சொல்லி பணியில் சேர அனுமதிக்க மறுக்கின்றனர்.
 ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக கூறியும் மறுக்கின்றனர்.
எனவே பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு மாறுதல் பணியிட உத்தரவு வழங்குவதை முற்றிலும் கைவிட வேண்டும். வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவுகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். முதல்வர் வேண்டுகோள் விடுத்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அலுவலர்கள் மேற்கண்ட காரணங்களை காட்டி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும்  திரும்பப் பெற்று, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுக்கும் இடையே உள்ள உறவை சுமுகமாக்கி பணித்திறன் மேம்பட உதவ வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government employee ,teachers ,Chief Minister , Jacotto-Geo request, action, cancellation
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...